Published : 06,Nov 2017 11:49 AM
மதத்தை தெரிந்துகொள்ள பொது இடத்தில் இளைஞரை நிர்வாணமாக்கிய மதவாத கும்பல்

ஹரியானாவில் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞரின் மதத்தை தெரிந்து கொள்ள, மக்கள் அதிகம் உள்ள பேருந்து நிலையத்தில் ஒருவரை ஒரு கும்பல் நிர்வாணமாக்கிய சம்பவம் நடந்தேறியுள்ளது.
ஹரியானாவின் ரவாரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு ஜோடி கலப்புத் திருமணம் செய்து கொண்டது. அவர்களில் மணப்பெண் தலித் சமூகத்தையும், மணமகன் யாதவ் சமூகத்தையும் சேர்ந்தவர்கள். அக்டோபர் 10 ஆம் தேதி இந்தத் தம்பதி ரவாரி நகருக்கு சென்ற போது, ஆண்கள், பெண்கள் என 15 பேர் கொண்ட கும்பல் இவர்களை சூழ்ந்து கொண்டு, அந்த இளைஞரின் மதத்தை தெரிந்து கொள்ள வலுக்கட்டாயமாக அவரை நிர்மாணமாக்கியது.
காவல்துறையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், ரவாரி பேருந்து நிலையத்தில் எங்களைச் சூழ்ந்த அந்தக் கும்பல், முதலில் எங்கள் அடையாள அட்டைகளை காண்பிக்கச் சொன்னார்கள். பின்னர் எனது கணவரை பொதுமக்கள் மத்தியில் வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கினர். மேலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினர் என்று அப்பெண் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து ரவாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சங்கீதா காலியா ஆங்கில நாளிதழுக்கு அளித்த தகவலில், ரவாரி பேருந்து நிலைய துணை காவல் உதவி ஆய்வாளர், இச்சம்பவம் தொடர்பாக பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்தச் சம்பவம் வெறும் வாக்குவாதம் என்று அதிகாரிகள் கருதியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு முழு தகவல் கிடைக்கவில்லை. இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பெண் பிடிபட்டுள்ளார். அவர் தன்னை சமூக சேவகி என்று கூறிக்கொள்கிறார். இதில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகிறோம். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்று கூறினார்.