
மகேந்திர சிங் தோனிக்கும் தனக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த பலரும் முயற்சி செய்தார்கள் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
தோனி உடனான உறவு குறித்த பல்வேறு கேள்விகளுக்கு கோலி மனம் திறந்து பதில் அளித்தார். கோலி பேசுகையில், “எங்களுக்கு இடையில் விரிசலை உருவாக்கும் நோக்கில் பலரும் பேசினார்கள். ஆனால், நானோ, தோனியோ அதுபோன்ற செய்திகளை படிப்பதே இல்லை. நாங்கள் ஒன்றாக இருப்பதை பார்க்கும் போது அவர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். எங்களுக்கிடையில் விரிசல் ஏற்படாதா என்று பார்க்கிறார்கள். நாங்கள் அதனைப்பற்றியெல்லாம் எங்களுக்குள் பேசி சிரித்துக் கொள்வோம்.
தோனியிடம் குழந்தைத்தனமான உற்சாகம் உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. என்னுடைய சிறுவயது சம்பவங்களை அவருடன் நிறையவே பகிர்ந்து கொண்டுள்ளேன். அவர் அதையெல்லாம் கேட்டு பயங்கரமாக சிரிப்பார். தோனிக்கும் எனக்கும் இடையில் பெரிய அளவில் புரிதல் உள்ளது. விக்கெட்டுகள் விழுந்தபின் விளையாடுகையில், அவர் இரண்டு ரன்கள் எடுக்க வேண்டும் என்று சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு ஓடிவிடுவேன். ஏனெனில் எனக்கு தெரியும் அவருடைய முடிவு சரி என்று” இவ்வாறு கூறினார்.