Published : 04,Nov 2017 05:21 PM
கமல்ஹாசன் மீது வழக்கு பதிய புகார்

நடிகர் கமல்ஹாசன் மீதி வழக்குப் பதிய வேண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அருகே மூக்குப்பீறியில் உள்ள நாசரேத் நகர பாரதிய ஜனதா கட்சியின் தலைவாராக உள்ள இ. ராமச்சந்திரன் என்பவர் நாசரேத் காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார்.அவர் அளித்துள்ள புகார் மனுவில் “நான் பாரதிய ஜனதா கட்சியில் நாசரேத் நகர தலைவராக பொது பணியாற்றி வருகிறேன். பிரபல நாளிதழ் ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் பாரதத்தின் பழமையான இந்து மதத்தை, இந்து கலாச்சாரத்தை இழிவுப்படுத்தி இந்துக்களை தீவிரவாதி என்றும் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் இந்து தீவிரவாதம் பரவுகிறது என்றும் இந்து தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது என்றும் பேசியுள்ளார். இந்துக்களை தீவிரவாதியாக சித்தரித்து பாரதத்தில் மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.