Published : 04,Nov 2017 02:04 AM

இன்று 2-வது டி 20 போட்டி : கோலி டீமை கட்டுப்படுத்துமா நியூசி?

India-keen-to-wrap-up-series

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டி 20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை இந்திய அணியிடம் இழந்த அந்த அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

டி 20 தொடரையாவது வெல்ல வேண்டும் என்பதில் நியூசிலாந்து அணி தீவிரமாக இருக்கிறது. இந்நிலையில் 2 வது டி20 போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இரவு நடக்கிறது. இந்த மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. இதனால் ரன் மழை பொழியும் என நம்பலாம். 
இந்திய அணியில் ரோகித், தவான், கோலி சிறப்பாக ஆடி வருகின்றனர். இவர்கள் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு தண்ணிக்காட்டி வருவதால், இவர்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று நியூசிலாந்து அணி திவீரமாக யோசித்து வருகிறது. அதே போல பந்துவீச்சில் பும்ரா, புவனேஷ்வர் குமார், சாகல், அக்‌ஷர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.

நியூசிலாந்து அணியும் சிறப்பாக ஆடிவருகிறது. பந்துவீச்சில் செளதி, போல்ட், சான்ட்னர், சோதி ஆகியோர் நன்றாக பந்துவீசுகின்றனர். கடந்த போட்டியில் பீல்டிங்கில் அந்த அணி சொதப்பியதால் தோல்வியை சந்தித்தது. சில எளிதான கேட்ச்களை கூட அந்த அணி வீரர்கள் கோட்டை விட்டனர். அதனால் இன்றைய போட்டியில் பீல்டிங்கிலும் அந்த அணி அதிக கவனம் செலுத்தும் என்று தெரிகிறது.
கடந்த போட்டியுடன் நெஹ்ரா ஓய்வு பெற்றுவிட்டதால், அவருக்குப் பதில் முகமது சிராஜ் அல்லது குல்தீப் யாதவ் இந்திய அணியில் இடம் பெறலாம்.
போட்டி இன்று இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்