Published : 01,Nov 2017 07:15 AM

ஐபிஎஸ் அதிகாரி காப்பியடித்த விவகாரம்: கைக்குழந்தையுடன் மனைவி சிறையிலடைப்பு

Copy-Issue-IPS-Officer-Wife-arrested

சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் யுபிஎஸ்சி முதல்நிலைத்தேர்வில் காப்பியடிக்க உதவியதற்காக கைது செய்யப்பட்ட அவரது மனைவி, ஒன்றரை வயது குழந்தையுடன் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வுகள் கடந்த வாரம் நடைபெற்றது. மத்திய தேர்வாணையம் நடத்தும் இந்த தேர்வுகள் இந்தியா முழுவதும் 24 நகரங்களில் நடந்தப்பட்டன. சென்னையில் மட்டும் 763 பேர் இத்தேர்வுகளை எழுதினர். ‌இந்நிலையில்,சென்னையில் பிரசிடென்சி பள்ளியில் நடந்த தேர்வின்போது, ப்ளுடூத் பயன்படுத்தி ஒருவர் தேர்வு எழுதுவதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எழும்பூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துறை இணை ஆணையர் மனோகரன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். அப்போது, ஷபீர் கரிம் என்பவர் ப்ளுடூத் பயன்படுத்தி தேர்வில் விடைகளை கேட்டு எழுதியது தெரியவந்தது.

ஹைதராபாத்தில் உள்ள தனது மனைவியிடம் கேள்விகளுக்கான விடைகளை கேட்டு ஷபீர் எழுதியுள்ளார். ‌அவரிடம் இருந்து செல்போன், ப்ளுடூத் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட ஷபீர் ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர். அவர் மீது சட்டப்பிரிவு 420-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேர்வில் ஷபீருக்கு உதவிய அவரது மனைவியை பிடிக்க தனிப்படை காவல்துறை ஹைதராபாத் விரைந்தனர். அவரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். 18 மாத குழந்தையுடன் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி ஜாய்சி ஜோய், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்