Published : 01,Nov 2017 06:35 AM
ஆர்.கே.நகர் தேர்தல் வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
பணப்பட்டுவாடா புகார் தொடர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதனிடையே பணப்பட்டுவாடா புகாருக்கு உள்ளானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஆர்.கே.நகர் தேர்தலை அறிவிக்க தடை கோரி திமுக வேட்பாளர் மருதுகணேஷ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்படுவதால் இந்த வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வு மாற்றம் செய்து நீதிபதி ரவிச்சந்திர பாபு உத்தரவிட்டார். அதேசமயம் தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் வரை தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக எவ்வித அறிவிப்பையும் வெளியிடாது என தான் நம்புவதாகவும் நீதிபதி ரவிச்சந்திரபாபு தெரிவித்தார்.