
தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், அடுத்த 24 மணிநேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என கூறினார். தென் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக கன மழை பெய்யக்கூடும் எனவும், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் சீர்காழியில் 31 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருப்பதாகவும், செம்பரம்பாக்கத்தில் 18 சென்டிமீட்டரும், விமானநிலையத்தில் 17 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளதாவும் பாலசந்திரன் கூறினார்.
இதனிடையே கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் ஒரே நாளில் 144 மில்லியன் கன அடி உயர்ந்துள்ளது. அத்துடன் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து 1,719 கனஅடியாக இருக்கிறது. தற்போது உள்ள 452 மில்லியன் கன அடி நீரில், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் சென்னை குடிநீருக்கு 52 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.