
தனி கேட்டலோனியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்சிலோனாவில் நடந்த பிரம்மாண்ட பேரணியில் சுமார் மூன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்.
நீண்ட பாரம்பரியமும், கலாச்சாரமும் கொண்ட கேட்டலோனியா, ஸ்பெயினில் இருந்து பிரிந்து செல்வதற்கான பொது வாக்கெடுப்பு அண்மையில் நடந்தது. பலத்த எதிர்ப்புக்கு இடையே நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக 90 சதவிகித மக்கள் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து இன்று தனி கேட்டலோனியா தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என, அந்த பிராந்தியத்தின் தலைவர் கார்லஸ் பியூஜ் மாண்ட் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனி நாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒருங்கிணைந்த ஸ்பெயினை வலியுறுத்தியும் கேட்டலோனியாவின் தலைநகரான பார்சிலோனாவில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
இதில் சுமார் மூன்றரை லட்சம் பேர் பங்கேற்று, தனி நாட்டுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பியதாக ஸ்பெயின் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒருங்கிணைந்த ஸ்பெயினுக்கு ஆதரவாக கடந்த சனிக்கிழமை முதல் மேட்ரிட் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் போராட்டங்கள் வலுத்து வருவதை தொடர்ந்து, தனி கேட்டலோனியா தொடர்பான அறிவிப்பை அந்த பிராந்தியத்தின் தலைவர்கள் தற்காலிகமாக ஒத்தி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் தனி நாடு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டாலும், அதை கலைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஸ்பயின் பிரதமர் மரியானோ ரஜோய் தெரிவித்துள்ளார். கேட்டலோனியாவில் கூடுதல் படைகளை குவிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.