
தமிழகத்தில் யார் முதல்வராக பொறுப்பேற்க வேண்டுமென முடிவு செய்வதில் தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ் முன் 3 வாய்ப்புகள் உள்ளன.
ஒன்று, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டு, அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்து, பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரலாம். அவர் நிரூபிக்கும்பட்சத்தில் முதல்வராக தொடர அனுமதிக்கலாம். தவறினால் ஆட்சியை கலைக்கலாம்.
ஆளுநர் முன் உள்ள அடுத்த வாய்ப்பு, இருவருக்கும் ஒரே நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் வாக்கெடுப்பு நடத்துவது. இதற்காக சட்டமன்றத்தை கூட்டும் ஆளுநர், பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரில் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை அறிய உறுப்பினர்களின் வாக்கெடுப்பு நடத்தி முதலமைச்சரை தேர்வு செய்யலாம். இருவரில் எவருக்கும் 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காமல்போனால், ஆட்சியை கலைத்து ஆளுநர் உத்தரவிடலாம். அடுத்த தேர்தல் நடைபெறும் வரை ஆளுநர் ஆட்சியே தமிழகத்தில் அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மூன்றாவதாக அவர் முன் இருக்கும் வாய்ப்பு தற்போதைய சட்டமன்றத்தை சில காலங்களுக்கு முடக்கி வைப்பது. உள்கட்சி குழப்பம் நிலவுவதால், பெரும்பான்மையை நிரூபிப்பதில் இழுபறி ஏற்படும் எனக்கூறி சட்டமன்றத்தை முடக்கி வைத்து, ஆளுநர் ஆட்சியை கொண்டுவரலாம்.