
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி தடுமாறி வெற்றிபெற்றது.
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இலங்கை, ஒருநாள் தொடரை பாகிஸ்தானிடம் இழந்தது. இந்த அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இப்போது நடந்து வருகிறது. முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது டி20 போட்டியில் அபுதாபியில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குணதிலகா நிலைத்து நின்று 51 ரன்களும் சமரவிக்ரமா 32 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு இலங்கை அணியால் 124 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர் பஹீம் அஷ்ரப், 3 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ஹாட்ரிக் விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. அகமது சேஷாத் 27 ரன்களும் கேப்டன் சர்ஃராஸ் அகமது 28 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்காததால் அந்த அணி தோற்கும் நிலையில் இருந்தது. பின்னர் பந்துவீச்சாளர் சதாப் கான், 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பாகிஸ்தான் அணி, ஒரு பந்து மீதமிருக்கும் நிலையில் 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் பெரேரா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.