
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஓரிரு முறை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேட்டுப்பட்டியில் 8 சென்டி மீட்டரும், பெருந்துறையில் 5 சென்டி மீட்டரும், தேவாலா, திருப்பூர், வால்பாறையில் 4 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான குமுளி, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலையிலிருந்து தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 243 கன அடியிலிருந்து 701 கன அடியாக அதிகரித்துள்ளது. எனவே அணையின் நீர்மட்டமும் ஒரு புள்ளி உயர்ந்து 121 புள்ளி 60 அடியாக உயர்ந்துள்ளது. தற்போது பாசனம் மற்றும் குடிநீருக்காக 467 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.