Published : 27,Oct 2017 08:26 AM
கல்யாணம் எப்போது? பதில் அளித்தார் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கல்யாணம் தனக்கு எப்போது என்பது குறித்து கூறியுள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராகுல்காந்தி, விருந்தினர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க நேரத்தை ஒதுக்கினார். அப்போது ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ராகுலிடம் உங்களின் கல்யாணம் எப்போது என்று கேட்டார். இதற்கான பதிலை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலாக இருப்பதாகவும் கூறினார். இதற்கு சிரித்தப்படியே பதில் அளித்த ராகுல் காந்தி, அது எப்போது நடக்க வேண்டுமோ அப்போது நடக்கும். நான் விதியை நம்புகிறவன் என்று அனைவரின் முன்பும் கூறினார்.
ராகுல் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதாகவும், நீச்சல் செய்வதாகவும் ஆனால் இதை பற்றி மேடையில் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தான் ஏகிடோவில் பிளாக் பெல்ட் வாங்கிருப்பதாகவும், முறையான உடற்பயிற்சிகளை செய்து வந்ததாகவும் ஆனால் கடந்த 4 மாதங்களாக இதை கடைப்பிடிக்க முடியவில்லை என்று ராகுல் அனைவரின் முன்பும் ஒப்புக்கெண்டார். இதற்கு உடனே விஜேந்தர் சிங், நீங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டால் பலருக்கும் முன்மாதிரியாக இருக்குமே என்று ராகுலிடம் தெரிவித்தார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் வயது 47யை அடைந்திருக்கும் நிலையில் தற்போது அவரின் அனைத்து பொதுக்கூட்டங்களிலும் கல்யாணம் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.