Published : 14,Feb 2017 08:40 AM
குன்ஹாவின் தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததை அதிமுகவில் உள்ள சசிகலா எதிர்ப்பாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர். கடந்த 2014 செப்டம்பர் 14ம் தேதி குன்ஹா வழங்கிய இதே தீர்ப்புக்கு அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சசிகலா உள்ளிட்டோர் மீது தொடங்கப்பட்ட வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
தீர்ப்பை அடுத்து முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தனது பதவியை இழந்தார். இதையடுத்து பதவியேற்றுக்கொண்ட முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் அனைவரும் கண்ணீருடனேயே பதவியேற்றுக் கொண்டனர். அதிமுக தொண்டர்கள் ஒரு சிலர் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை விமர்சித்ததுடன், அவருக்கு எதிராக சுவரொட்டிகளும் ஒட்டினர்.
அதிமுகவினரின் கடுமையான எதிர்ப்பை அன்றைய தினம் பெற்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவின் தீர்ப்பையே தற்போது உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. குன்ஹாவின் தீர்ப்பில் ஜெயலலிதா குற்றவாளி என்று கூறியதை உச்சநீதிமன்றம் மறுக்கவில்லை. அவர் இறந்து விட்டதால் விடுவித்திருக்கிறது அவ்வளவுதான்.
ஆனால், இன்றைய அரசியல் சூழலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா என இரு அணிகளாக அதிமுக பிரிந்து கிடக்கிறது. அதனால், இன்றைய தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து சசிகலாவுக்கு எதிரான அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியுள்ளனர்.