Published : 25,Oct 2017 05:36 PM

உலகில் நீண்ட காலம் மன்னராக பதவி வகித்த பூமிபாலின் வாழ்வும் மரணமும்

life-and-death-of-Bhumibol-who-ruled-thailand-for-seventy-one-years

உலகின் மிக நீண்ட காலம் பதவி வகித்த மன்னர் என்ற பெருமையைப் பெற்றவர் மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேச். தனது நடவடிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உடைய மன்னராகத் திகழ்ந்தவர் பூமிபால்.

15 ராணுவப் புரட்சிகள் நடந்திருக்கின்றன. 16 முறை அரசியல் சட்டம் புதிதாக எழுதப்பட்டுள்ளது, 27 பிரதமர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். மன்னர் மட்டும் மாறவே இல்லை. உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்த இந்த மன்னர் தாய்லாந்தின் பூமிபால் அதுல்யதெச். 1946-ம் ஆண்டில் இவரது ஆட்சி தொடங்கியது.

அமெரிக்காவின் மாசசூசட்சில் 1927-ம் ஆண்டு பிறந்த பூமிபாலுக்கு அனந்த மகிதோல் என்ற மூத்த சகோதரரும், கல்யாணி வதனா என்று மூத்த சகோதரியும் உண்டு. 1946-ம் ஆண்டு நாட்டின் மன்னராக இருந்து அனந்த மகிதோலின் இறப்பிற்குப் பின்னர் பூமிபால் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

அந்தக் காலத்தில் ராணுவ ஆட்சி நடந்து வந்ததால், அரண்மனைக்கும், மன்னர்களுக்கும் உண்மையான எந்த அதிகாரமும் கிடையாது. மன்னர் என்பவர் அலங்காரப் பொருளாகவே பார்க்கப்பட்டார். படிப்படியாக ஆட்சி நிர்வாகத்தில் தலையிடத் தொடங்கிய மன்னர், மக்களிடமும் நன்மதிப்பைப் பெறத் தொடங்கினார். 1992-ம் ஆண்டு தாய்லாந்தில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டபோது, அதனைத் தடுத்து நிறுத்தியவர் பூமிபால்.

நாட்டில் போதை மருந்துப் பழக்கம் அதிகமானதால், அதற்கு எதிரான நடவடிக்கைகளை பூமிபால் மேற்கொண்டார். போதை மருந்து வைத்திருப்பதும், விற்பனை செய்வதும் கடுமையான குற்றங்கள் என அறிவிக்கப்பட்டன. தண்டனைகள் கடுமையாக்கப்பட்டன. 2003-ம் ஆண்டில் இத்தகைய சட்டங்கள் மூலம் சுமார் 2500 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர் என்பதாலும், ஆட்சியில் நேரடியாகத் தலையிடுபவர் என்பதாலும் பூமிபாலிடம் அதிகாரங்கள் குவிந்திருந்தன. நாட்டின் சட்டங்களை மன்னர் நினைத்தால் ரத்து செய்யலாம், அல்லது புதிதாக உருவாக்கலாம். பல முக்கியமான பதவிகளுக்கு உரியவர்களை மன்னரே நேரடியாக நியமிக்கவும் செய்யலாம்.

சாக்ஸபோன் வாசிப்பதில் வல்லவர், புகைப்படங்கள் எடுப்பதில் வித்தகர், அறிவியலில் ஆர்வம் கொண்டவர், அற்புதமான ஓவியர் பூமிபால்.

ஃபோர்ப்ஸ் இதழின் கணிப்புப்படி, உலகத்திலேயே மிகவும் பணக்கார மன்னர் இவர்தான். இவரது சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய். பாங்காக் உள்ளிட்ட பல நகரங்களில் இருக்கும் வானுயர்ந்த கட்டடங்கள் பூமிபாலுக்குச் சொந்தம். அவற்றிலிருந்து வாடகையாகவே பல ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கிறது. தனி அமைப்பு ஒன்று இவற்றையெல்லாம் நிர்வகிக்கிறது. அரண்மனையில் வரவு செலவுக் கணக்குகளை தணிக்கை செய்யவோ, பொதுவில் வெளியிடவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. அவர் வரி கட்டவேண்டிய அவசியமும் கிடையாது. பட்டை தீட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய வைரமான பொன்விழா வைரம் பூமிபாலிடம் இருந்தது. இதன் மதிப்பு மட்டும் 72 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

தாய்லாந்து அரசியல் சட்டப்படி, மன்னர் என்பவர் சாதாரண மனிதரல்லர். கடவுளுக்கு ஒப்பானவர். மன்னரை அவமதிப்பதும் விமர்சிப்பதும் இங்கு தண்டனைக்குரிய குற்றம். மன்னருக்கு எதிரான கருத்துகள், புத்தகங்கள் போன்றவையெல்லாம் தடை செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு சுமார் 500 பேர் இந்தக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படுகின்றனர்.

71 ஆண்டுகள் மன்னராக இருந்த பூமிபால் அதுல்யதேஜ் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி காலமானார். ஓராண்டாக அவரது பூதவுடல் பாதுகாக்கப்பட்டிருந்த நிலையில் பாரம்பரிய முறைப்படி நாளை தகனம் செய்யப்படுகிறது. இதற்காக பாங்காக்கில் பிரத்யேக தகன மேடையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதலே தகன‌ம் நடைபெறும் இடத்துக்கு ஏராளமான மக்கள் குவிந்து வந்த வண்ணம் உள்ளனர். நாளை நடைபெறவுள்ள இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் சுமார் இரண்டரை லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மன்னராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புரிந்து செயல்பட்டதால் ‌அவர்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருப்பார் பூமிபால்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்