டிச.9 மற்றும் 14-ல் குஜராத் மாநில சட்டசபை தேர்தல்: தேர்தல் ஆணையர் அறிவிப்பு

டிச.9 மற்றும் 14-ல் குஜராத் மாநில சட்டசபை தேர்தல்: தேர்தல் ஆணையர் அறிவிப்பு
டிச.9 மற்றும் 14-ல் குஜராத் மாநில சட்டசபை தேர்தல்: தேர்தல் ஆணையர் அறிவிப்பு

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு, இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் டிசம்பர் 14 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலுடன் குஜராத் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இமாச்சலப் பிரதேசத்திற்கு மட்டும் தேர்தல் தேதியை முதலில் அறிவித்தது தேர்தல் ஆணையம். அப்போது குஜராத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குஜராத்தில் பாஜக இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்காகவே தேர்தல் தேதி தாமதப்படுத்தப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது.

இந்நிலையில் குஜராத் சட்டப்பேரவைக்காக தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி டெல்லியில் இன்று அறிவித்தார். அதன்படி குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு, இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் டிசம்பர் 14 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தலுக்கு நவம்பர் 14-ம் தேதியில் இருந்து நவம்பர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அவை நவம்பர் 22-ம் தேதி ஆய்வு செய்யப்படும். வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 24. அதேபோல், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு நவம்பர் 20-ஆம் தேதி முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அவை நவம்பர் 28-ஆம் தேதி ஆய்வு செய்யப்படும். வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ஆம் தேதி.

தேர்தல் ஆணையர் மேலும் பேசும்போது, “கடந்தாண்டை விட வாக்குப்பதிவு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது வாக்குப்பதிவு மையங்களின் எண்ணிக்கை 50-லிருந்து 120 ஆக அதகரிக்கப்பட்டுள்ளது. குஜராத் தேர்தலுக்காக மொத்தமாக 50,128 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்படும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் பறக்கும் படை மூலம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு வேட்பாளரும் ரூ.28 லட்சம் வரை தேர்தலுக்கு செலவு செய்யலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடைமுறைகள் இன்று முதல், உடனடியாக அமலுக்கு வருகின்றன” என்றார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 1998-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை பாஜக ஆட்சியில் நீடித்து வந்தாலும், இம்முறை அங்கு போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com