Published : 25,Oct 2017 07:43 AM
மீன் வளத்தை பாதிக்கும் சீன என்ஜின்கள்: மீனவர்கள் கவலை!

சீன என்ஜின்கள் மூலம் மீன்பிடிப்பதால் மீன்களின் இனப்பெருக்கம் குறைந்து, மீன்வளம் குறையும் அபாயம் ஏற்படும் என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சாதாரண விசைப்படகு 15 மீட்டர் நீளம் கொண்டது. சீன என்ஜின் விசைப்படகு 20 மீட்டர் நீளம் கொண்டது. சாதாரண விசைப்படகுகள் மணிக்கு 8 நாட்டிகல் மைல் வேகத்தில் சென்றால் சீன என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் 15 நாட்டிகல் தூரம் செல்லும். சாதாரண படகில் ஒரு முறை கடலுக்குச் சென்றால் ஒரு டன் மீன்களை பிடித்து வர முடியும். ஆனால், சீன என்ஜின் பொருத்தப்பட்ட படகில் ஒரு முறை கடலுக்குச் சென்றால் 20 டன் அளவிற்கு மீன்களை அள்ளி வர முடியும்.
பெரும்பாலான மீனவர்கள் 120 குதிரைத்திறன் கொண்ட விசைப்படகுகள் மூலமே மீன்பிடித்து வருகின்றனர். விசைப்படகுகளின் அதிகபட்ச குதிரைத்திறன் 160 ஆக மட்டுமே இருக்க வேண்டும் என அரசு கூறியுள்ள நிலையில், சீன என்ஜின்களின் குதிரைத்திறன் 400 ஆக உள்ளது. இதன் மூலம் மீன்பிடிப்பதால் மீன்களின் இனப்பெருக்கம் குறைந்து மீன்வளம் குறையும் அபாயம் இருப்பதாக பெரும்பாலான மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், சீன என்ஜின் படகுகள் மூலம் அதிகளவில் மீன் பிடிப்பதால் அவர்களிடமே வியாபாரம் இருக்கும் என்றும் மற்றவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும் பெரும்பாலான மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.