Published : 23,Oct 2017 01:05 PM
பள்ளியில் சித்ரவதை: மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

கேரளாவில் தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவி, ஆசிரியர்களின் சித்ரவதை தாங்க முடியாமல் பள்ளி கட்டடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்த 10ம் வகுப்பு மாணவி கடந்த 20ம் தேதி அவர் பள்ளி கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆசிரியைகள் சித்ரவதையால்தான் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து, அப்பள்ளி ஆசிரியைகள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு மாணவர் அமைப்புகள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கேட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றன.