நிலைத்து ஆடிய டாம் லாதம், ரோஸ் டைலர்: நியூசி. அணி அபார வெற்றி!

நிலைத்து ஆடிய டாம் லாதம், ரோஸ் டைலர்: நியூசி. அணி அபார வெற்றி!
நிலைத்து ஆடிய டாம் லாதம், ரோஸ் டைலர்: நியூசி. அணி அபார வெற்றி!

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா 20 ரன்களிலும், தவான் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி நிலைத்து விளையாடி சதம் அடித்தார். சரியான இணை அமையாதபோதிலும் கோலி திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்து வந்த கேதர் ஜாதவ் 12, தினேஷ் கார்த்திக் 37, தோனி 25, பாண்டியா 16 ஆகிய ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து விளையாடிய கோலி 121 ரன்கள் எடுத்த நிலையில், இறுதி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவ்வாறாக 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு இந்தியா 280 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளையும், சவுதி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான மார்டின் குப்தில் மற்றும் கோலின் மன்ரோ நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் 32 ரன்கள் எடுத்த நிலையில் பாண்ட்யா பந்துவீச்சில் குப்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதேபோன்று 28 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் மன்ரோ ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த நியூசிலாந்து கேப்டன் கெய்ன் வில்லியம்சன் 6 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வெளியேறினார். இருப்பினும் அடுத்து வந்த ரோஸ் டைலர் மற்றும் டாம் லாதம் ஆகியோர் திறைமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஆட்டத்தின் முடிவில் அதிரடியை வெளிப்படுத்திய டாம் லாதம், 103 ரன்கள் எடுத்து இறுதிவரையில் ஆட்டமிழக்கமால் இருந்தார். அவருடன் இணையாக விளையாடிய டைலர், 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், புவனேஷ்குமார் பந்துவீச்சில் 95 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த ஹென்றி நிக்கோல்ஸ் முதல் பந்திலேயே 4 ரன்களை அடிக்க, 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்தியாவின் தரப்பில் புவனேஷ்குமார், பும்ரா, குல்தீப், பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com