Published : 21,Oct 2017 06:36 AM
மெர்சலில் 4 காட்சிகளை நீக்க முடிவு?

மெர்சல் படத்தில் நான்கு காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி குறித்து விமர்சன வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதனிடையே படத்தை மறுபடியும் மறு தணிக்கைக்கு அனுப்ப வேண்டாம். அது ஏற்கனவே சான்றிதழ் பெற்ற படம் என்று கமல் கருத்துத் தெரிவித்திருந்தார். மேலும் விமர்சனங்களை தர்க்கப் பூர்வமாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர விமர்சகர்களின் வாயை அடைக்கக் கூடாது என்றும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். பாஜகவைச் சேர்ந்த நடிகை காயத்ரியும் மெர்சல் ஒரு திரைப்படம்தானே என்று கேட்டிருந்தார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பில் மெர்சல் படத்தில் இருந்து நான்கு காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாக மீண்டும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கக் கோரி வரும் 23 அல்லது 24ம் தேதியில் தணிக்கைக் குழுவிடம் தயாரிப்பாளர் தரப்பில் கடிதம் தரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சர்ச்சைக்குரிய காட்சிகளை விஜய் ரசிகர்களும் மற்றவர்களும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.