Published : 20,Oct 2017 10:21 AM
பொறையார் பேருந்து பணிமனை விபத்து: பலியானோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

பொறையார் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள அரசு போக்குவரத்து கழகக் கட்டடம் இன்று அதிகாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கட்டடத்தில் உறங்கிக் கொண்டிருந்த 7 டிரைவர்கள், கண்டக்டர் என 8 பேர் உயிரிழந்தனர். சிலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.7.50 லட்சம் நிதியுதவி அளிக்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1.50 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்திற்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு தகுதி அடிப்படையில் போக்குவரத்து கழகத்தில் வேலை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் மீட்பு பணிகளை அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மேற்பார்வை செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.