பழைய கட்டடம் என்பதால் விபத்து ஏற்பட்டுள்ளது: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பழைய கட்டடம் என்பதால் விபத்து ஏற்பட்டுள்ளது: எம்.ஆர்.விஜயபாஸ்கர்
பழைய கட்டடம் என்பதால் விபத்து ஏற்பட்டுள்ளது: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

விபத்துக்குள்ளான போக்குவரத்து தொழிலாளர் பணிமனை, பழைய கட்டடம் என்பதால் விபத்து ஏற்பட்டுவிட்டது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தமிழக அரசுப் பணிமனைகளில் உள்ள பழைய கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

நாகை அருகே பொறையாரில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து புதிய தலைமுறையிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், “இடிபாடு சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவுடன், முதலமைச்சரை சந்தித்து தகவலை கூறினேன். முதலமைச்சர் உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு செல்லுமாறு கூறினார். சம்பவ இடத்தில் கைத்தறித்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் விரைவான மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சர் இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கான நிவாரண நிதியை அறிவிப்பார்” என்று கூறினார்.

மேலும், “கட்டடம் மிகவும் பழமையானது என்பதால் விபத்துக்குள்ளாகியுள்ளது என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கட்டடங்கள் புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை எங்கள் தரப்பிற்கு வரவில்லை. ஏதேனும் கோரிக்கை விடுக்கப்பட்டதா என்பது நேரில் ஆய்வு மேற்கொண்ட பிறகுதான் தெரியும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கு, பழுதடைந்த நிலையில் உள்ள பழமையான கட்டடங்களை இடித்து புதிய கட்டடங்கள் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com