
கொல்கத்தாவில் எல்ஐசி பில்டிங்கில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 10 தீயணைப்பு வண்டிகள் போராடி வருகின்றன.
கொல்கத்தாவின் மத்திய பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு சாலையில் இருக்கிறது, 19 மாடி கட்டிடம். இதில் எல்.ஐ.சி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி உட்பட பல்வேறு நிறுவனங்களில் அலுவலகங்கள் உள்ளன. இந்தக் கட்டிடத்தின் 16 வது மாடியில் இன்று காலை 10.20 மணிக்கு திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடி வருகின்றன. ஆனாலும் தீ மற்ற கட்டிடங்களுக்கும் பரவி வருகிறது. தீபாவளி விடுமுறை என்பதால் அலுவலகத்தில் யாரும் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.