Published : 16,Oct 2017 05:17 PM
இன்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சால் உயிரிழப்புகள்

டெங்கு, பன்றிக்காய்ச்சல், வகைப்படுத்தப்படாத காய்ச்சல் என பலவித காய்ச்சல்கள் அச்சுறுத்திவரும் வேளையில், இன்றும் காய்ச்சலுக்கு உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சரத் என்பவரின் மனைவி அஷ்வினி. இவர் கடந்த சில வாரங்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில், கடந்த 11ஆம் தேதி பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இதேபோன்று, கிருஷ்ணகிரி அருகே சின்னதாளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முனிராஜ், கடந்த இரண்டு வாரகாலமாக தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சோதனை செய்ததில் அவருக்கு பன்றிகாய்ச்சல் இருப்பது தெரியவந்தது. பின்னர் தீவிர சிகிச்சை அளித்தும் முனிராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பலவித காய்ச்சல்களில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை தரமணி பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவரின் 14 வயது மகன் சதீஷ், தாம்பரத்தை அடுத்த சோமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் அண்ணநகர் பகுதியில் தனது தாத்தா வீட்டில் தங்கி படித்து வந்தார். பத்து நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை பென்னலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.