Published : 12,Oct 2017 04:41 PM
டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு இன்று ஒரே நாளில் 14 பேர் பலி

தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன், டெங்கு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாத்தையங்கார்பட்டியைச் சேர்ந்த அபிநயா எனும் சிறுமி டெங்கு காய்ச்சல் காரணமாக பலியாகியுள்ளார். சேலம் மாவட்டம் கூட்டாத்துப்பட்டியைச் சேர்ந்த அபிநயா எனும் 9 வயது சிறுமி, நாயக்கன்பட்டியைச் சேர்ந்த 8 வயது சிறுமி கீர்த்தி வைரஸ் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பாலாஜி எனும் சிறுவன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். பழனியைச் சேர்ந்த ஹரிவிஷ்ணு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த மாணவி மதுமதி டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த விஜயகுமாரி, மதுரை அண்ணாநகரை சேர்ந்தச் 3 வயது குழந்தை வைரஸ் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சென்னிமலை பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவி மாரியம்மாள் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் கொசவம்பாளையத்தைச் சேர்ந்த சரவணன் எனும் இளைஞர் மற்றும் ராசிபுரத்தைச் சேர்ந்த பிரியங்கா எனும் கல்லூரி மாணவி வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்.