[X] Close

பாஜக பேரணியில் சிபிஎம் ஆதரவு கோஷம்: கிண்டலடிக்கும் கேரள நெட்டிசன்கள்

BJP-workers-raised-the-slogan-Jai-Jai-CPM-in-Kerala-Jan-Raksha-Yatra

கேரள மாநிலத்தில் பாஜக நடத்தும் ‘ஜன ரக்‌ஷா யாத்ரா’ பேரணியில் ‘ஜெய் ஜெய் சிபிஎம்’ என்ற கோஷம் எழுந்ததால், அம்மாநில நெட்டிசன்கள் அதை மீம்களாக போட்டு கிண்டலடித்துக் கொண்டிருக்கின்றனர்.

கேரளாவில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. கேரளாவில் பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் நீண்ட காலமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல்களில் இரு தரப்பிலும் பல உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளன.


Advertisement

இந்த நிலையில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ‘ஜன ரக்‌ஷா யாத்ரா’ என்ற பெயரில் 15 நாட்கள் பிரச்சார யாத்திரையை நடத்த பாஜக முடிவு செய்தது. இந்த யாத்திரை முதலமைச்சர் பினராயி விஜயனின் சொந்த மாவட்டமான கன்னூரில் உள்ள பையனூரில் கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. யாத்திரையை அமித்ஷா தொடங்கி வைத்தார். 15 நாட்கள் நடைபெறவுள்ள இந்த யாத்திரை இறுதியில் தலைநகர் திருவனந்தபுரத்தில் முடிவடைகிறது. இந்த யாத்திரையில் பாஜக மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் மற்றும் 5 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்தப் பேரணியில் கலந்து கொண்ட அமித்ஷா, திட்டமிட்டவாறு பேரணியில் தொடராமல் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனின் சொந்த கிராமத்திற்கு வராமல் டெல்லி புறப்பட்டு சென்றார். இதனால் கேரள இணையவாசிகள், ‘அமித்தடி’ என்று வர்ணித்தனர். ‘அமித்தடி’ என்பதற்கு திட்டத்தை நிறைவு செய்யாமல் தப்பி ஓடுதல் என்று பொருள். இதன் காரணமாக, இன்டர்நேஷனல் சாலு யூனியன், ட்ரோல் ரிபப்ளிக், ட்ரோல் மலையாளம் போன்ற முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் பாஜக தலைவரையும், பேரணியையும் கடுமையாக நையாண்டி செய்து வருகின்றன.


Advertisement

இதில் யோகி ஆதித்யநாத் குறித்து வெளியான காமெடிகள்தான் அதிகம் இடம்பெற்றன. பேரணியில் கலந்துகொண்ட யோகி ஆதித்யநாத், கேரளாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகவும், மருத்துவ வசதிகள் சரியில்லை என்றும் விமர்சித்திருந்தார். மேலும், கேரளா, உத்தரப் பிரதேசத்திடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார். 
கேரளாவைக் காட்டிலும் உ.பி. எல்லா வகையிலும் பின் தங்கியுள்ளதாகக் கூறி, கேரள அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது ஒருபுறம் இருந்தாலும், இணையவெளியில் மிகப்பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. காரணம், சமீபத்தில்தான் உ.பி. மாநிலத்தின் கோரக்பூர் மருத்துவமனையில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒரே நேரத்தில் இறந்தனர். எனவே, யோகியின் இந்த கூற்றுக்கு போட்டோ மீம்களும், வீடியோ மிம்களும் ஆயிரக்கணக்கில் இணையவெளியில் பரவின.

நேற்றைய தினம் பேரணியில், ‘ஜெய் ஜெய் சிபிஎம்’ என்று ஒருவர் முழக்கமிட, பேரணியில் சென்ற கூட்டமும் ‘ஜெய் ஜெய் சிபிஎம்’ என்று சொன்னதால் சலசலப்பு ஏற்பட்டது. உடனே சுதாரித்த பாஜக பொறுப்பாளர்கள், கூட்டத்தை அமைதிப்படுத்தினர். இந்த வீடியோ வெளியாகி, யுடியூப், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே, பாஜக பேரணியை நக்கலடித்துவரும் இணையவாசிகளுக்கு சரியான மேட்டர் சிக்கினால் விடுவார்களா? மீண்டும் மீம்கள் பறக்கத் தொடங்கிவிட்டன. ஏதோ ஒரு வகையில் பாஜக, கேரள மக்களை தங்கள் பக்கம் திருப்பிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close