Published : 10,Oct 2017 03:50 PM
சர்க்கரை ஆலை விஷவாயு தாக்கி 100 மாணவர்கள் பாதிப்பு

உத்தரப்பிரதேசத்தில் உள்ள சர்க்கரை ஆலையிலிருந்து வெளியேறிய கழிவுநீரின் விஷவாயு தாக்கி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்படைந்தனர்.
உத்திரப்பிரதேசத்திலுள்ள ஷாம்லி பகுதியில் சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு அருகில் தனியார் பள்ளி ஒன்றும் இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீரில் இருந்து திடீரென, அசுத்த வாயு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வாயு அருகில் இருந்த பள்ளி மாணவர்களை தாக்கியது. இதனால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். பாதிப்படைந்த மாணவர்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், வாந்தி போன்ற உபாதைகள் ஏற்பட, உடனே அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீஸார், விஷவாயு கசிந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.