Published : 08,Oct 2017 06:17 AM
மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

காரைக்கால் மீனவர்கள் 10 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
காரைக்கால் மீனவர்கள் 10 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றிவளைத்தனர். பின்னர் அத்துமீறி தங்கள் நாட்டு எல்லைப் பகுதிக்குள் வந்ததாகக் கூறிய இலங்கை கடற்படையினர், மீனவர்கள் 10 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை, இலங்கை கடற்படையினர் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் மீண்டும் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவ மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.