
டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி 5 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டார்.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இந்த காய்ச்சல் உறுதி செய்யப்பட்வர்கள் அரசு பொது மருத்துவமனையில்
தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி ஆகியோர்
தனித்தனியே ஆய்வு மேற்கொண்டு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக பல்வேறு பகுதிகளில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வந்த ஆளுநர் கிரண்பேடி மக்களிடையே டெங்கு குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையிலிருந்து 5 கீ.மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், இதில் யார்
வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் எனவும் றிவித்து இருந்தார். அதன்படி இன்று காலை ஆளுநர் கிரண்பேடி நடைபயணம் மேற்கொண்டார். ஆளுநர்
மாளிகையில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு நடைபயண பேரணி கடற்கரை சாலை, குருசுகுப்பம், சோலைநகர், முத்தியால்பேட்டை, செஞ்சிசாலை வழியாக
சென்று ஆளுநர் மாளிகை வந்து முடிவடைந்தது. இந்த நடைபயண பேரணியில் அரசு அதிகாரிகள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, கையில்
பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதுச்சேரியில் டெங்கு தொடர்பாக மாநில அரசு எடுக்கும் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்றும், சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் ஆளுநர் கிரண்பேடி
தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.