Published : 06,Oct 2017 04:38 AM
புதிய ஆளுநராக பதவியேற்றார் புரோஹித்

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று பதவியேற்றார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய ஆளுநர் பதவியேற்பு விழா, தேசிய கீதத்துடன் காலை 9.30 மணிக்குத் தொடங்கியது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். ஸ்டாலினுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா சார்பில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகளும் ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
பன்வாரிலால் புரோஹித்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்ததைத் தொடர்ந்து, ஆளுநருக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழகத்தில் ஓராண்டுக்குப் பிறகு முழு நேர ஆளுநர் பதவியேற்றுள்ளார்.