Published : 04,Oct 2017 06:16 AM
ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு: சபாநாயகருக்கு நோட்டீஸ்

ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில் சபாநாயகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அமளியில் ஈடுபட்ட காரணத்தால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளியேற்றப்பட்டனர். பன்னீர்செல்வம் அணி மட்டும் பேரவைக்குள் இருக்க, வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 122 வாக்குகளுடன் முதலமைச்சர் பழனிசாமி வெற்றி பெற்றார். அவருக்கு எதிராக, பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.
இதுதொடர்பாக, திமுக கொறடா சக்கரபாணி சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களை கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக திமுக தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனிடையே, அக்டோபர் 12-ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக சபாநாயகர், பேரவைச் செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.