
தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ராயலசீமா பகுதியில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று முன்தினம் இரவு, விடிய விடிய பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. அண்ணாசாலை, போரூர், வேளச்சேரி, வடபழனி, வண்டலூர், பொழிச்சலூர், அம்பத்தூர், மூலக்கடை உள்பட சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்ளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதிகபட்சமாக எண்ணூரில் 133 மில்லி மீட்டரும், மீஞ்சூரில் 126 மில்லி மீட்டரும், செங்குன்றத்தில் 101 மில்லி மீட்டரும் மழை பதிவானது. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.