
கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு, தேர்தல் களம் சூடுபிடிப்பதற்கு முன்பாகவே இடஒதுக்கீட்டு விவகாரங்கள் சூடுபிடித்துள்ளன. தற்போது, அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதைத் தக்கவைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரிவின் கீழ் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, கர்நாடக முஸ்லிம்கள் இப்போது 10 சதவீத பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு (EWS) வகைக்கு மாற்றப்படுவார்கள். அதாவது சமீபத்திய மறுசீரமைப்புடன், முஸ்லிம்கள் இப்போது பிராமணர்கள், வைசியர்கள், முதலியார்கள், ஜைனர்கள் மற்றும் பிறரைக் கொண்ட EWS ஒதுக்கீட்டில் போட்டியிட வேண்டியிருக்கும். மேலும், தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீடு, இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒக்கலிகா மற்றும் லிங்காயத் தலா 2 சதவிகிதம் வழங்கப்பட இருக்கிறது.
கடந்த ஆண்டு பெலகாவி சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது ஒக்கலிகார்களுக்கு 4 சதவீதமும் மற்றும் லிங்காயத்துகளுக்கு 5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவைப் பொறுத்தவரை லிங்காயத், ஒக்கலிகா கவுடா ஆகிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் அம்மாநில தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கிறார்கள். இதைக் கருத்தில்கொண்டே, வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்காகத்தான் இந்த இரண்டு சமூகத்தினருக்கும் இடஒதுக்கீட்டை அதிகரித்துக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்போது, முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு திரும்ப வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்படுகிறது. முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பறிப்பு கர்நாடகா தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் என்று சொல்லப்படும் நிலையில், அவர்களின் இடஒதுக்கீடு ரத்தை ஏற்க முடியாது என பாஜகவின் வாக்கு வங்கியான பஞ்சமசாலி லிங்காயத்துகளும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பட்டியலின மக்களில் பஞ்சாரா சமூகத்தினர் இடஒதுக்கீடு விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் உச்சமாக நேற்று (மார்ச் 27) போராட்டக்காரர்கள் முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டை தாக்கினர். அவர்களை, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த விவகாரமும் கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. பஞ்சாரா சமூகத்தினர், பட்டியல் பழங்குடி சமூகத்தில் உள் இடஒதுக்கீடு கேட்டு நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.