‘புஷ்பானா ப்ளவருனு நினைச்சீங்களா’ - இமிடேட் செய்த ரவீந்திர ஜடேஜா; வைரலாகும் வீடியோ!

‘புஷ்பா’ படத்தில் வைரலான அல்லு அர்ஜூனின் முகபாவனையை, ரவீந்திர ஜடேஜா நேற்று வலைப்பயிற்சியின்போது இமிடேட் செய்த வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.
‘புஷ்பானா ப்ளவருனு நினைச்சீங்களா’ - இமிடேட் செய்த ரவீந்திர ஜடேஜா; வைரலாகும் வீடியோ!

நடப்பாண்டுக்கான 16-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகிற 31-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்க உள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியும் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான குஜராத் அணியை முதல் போட்டியிலேயே வெல்லும் நோக்கில் சென்னை அணியும், 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியை வீழ்த்தும் முனைப்பில் குஜராத் அணியும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும், சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா நேற்று பயிற்சியின்போது, மைதானத்தின் கேலரியில் அமர்ந்திருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். பின்னர், ‘புஷ்பானா ப்ளவருனு நெனைச்சீங்களா.. ஃபயரு... ஃபயரு ஆட்டம்…” என்று சொல்லி ‘புஷ்பா’ படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் தனது தாடையை ஸ்டைலாக தடவும் பாவனையை, ஜடேஜா இமிடேட் செய்தார். இந்த வீடியோவை சென்னை அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில், தினேஷ் சண்டிமாலின் விக்கெட்டை வீழ்த்தியபோது, இதேபோன்று ரவீந்திர ஜடேஜா பாவனை செய்தது வைரலானது. கடந்த ஆண்டு பாதியில் சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா விலகியதுடன், காயம் காரணமாக சிலப் போட்டிகளில் இருந்து விலகினார்.

அதன்பிறகு, சிஎஸ்கே நிர்வாகம் ரவீந்திர ஜடேஜாவை தக்கவைத்துக்கொண்டாலும், நிர்வாகத்தின் மீது கோபத்தில் இருந்ததாகவும், இதனால் 2023ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் பங்கேற்பாரா என்று சந்தேகங்கள் எழும்பி வந்தது. எனினும், மனக் கசப்பை மறந்து இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா விளையாடுவது அந்த அணி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com