டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!

எம்.பி பதவியில் இருந்து, அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இதைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஒருபக்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!

எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் பரப்புரையின் போது, மோடி சமூகத்தினரை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. உடனடியாக அவருக்கு ஜாமீன் கிடைக்கப்பெற்ற நிலையிலும் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை அடுத்து, எம்.பி பதவியில் இருந்து, அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இதைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஒருபக்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து இரண்டு அவைகளிலும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தார்கள். இந்நிலையில், மக்களவை உறுப்பினர் என்ற வகையில், ராகுல் காந்திக்கு அரசு இல்லம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி தற்போது புதுடெல்லி பகுதியில் உள்ள "துக்ளக் லேன்" என அழைக்கப்படும் தெருவில் உள்ள இரண்டாம் எண் பங்களாவில் வசித்து வருகிறார். இந்த அரசு பங்களா அவருக்கு 2004-ம் வருடத்தில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஒதுக்கப்பட்டது. இந்த அரசு பங்களாவை அவர் திரும்ப அளிக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர்களுக்கான குடியிருப்பு வசதிக்குழு தெரிவித்து, அதற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.

பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிக்காலம் முடிந்து ஒரு மாத காலத்தில் அரசு வழங்கியுள்ள இல்லத்தை காலி செய்ய வேண்டும் என விதி இருந்தாலும், ராகுல் காந்திக்கு சி ஆர் பி எப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவர் அரசு இல்லத்தை விட்டு வெளியேறுவதில் சில சிக்கல்கள் உள்ளன. ஆகவே அரசு பங்களாவை காலி செய்வதற்கு ராகுல் காந்தி கூடுதல் அவகாசம் கேட்பதற்கு வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com