
கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை பல சுவாரஸ்யங்கள் நடப்பதுண்டு. அதிலும் டி20 என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால், அது எல்லாப் போட்டிகளிலும் நடைபெறாது. எப்போதாவதுதான் அதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும். அப்படியான ஒரு போட்டிதான் இன்று நடைபெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2வது டி20 போட்டியில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. அது என்னவென்று இங்கு பார்ப்போம்.
டெஸ்ட் தொடரை வென்ற தெ.ஆ! சமனில் முடிந்த ஒரு நாள் தொடர்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இரண்டாது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
258 ரன்கள் குவித்து மலைக்க வைத்த மேற்கு இந்திய தீவுகள்!
இதில் முதலில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களைக் குவித்தது. இதன்மூலம் டி20யில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் பட்டியலில் 7வது இடத்தை மேற்கிந்திய தீவுகள் பிடித்தது. இந்த அளவுக்கு அந்த அணி ரன்களைத் தொடுவதற்கு கைலே மேயர்ஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் காரணமாக இருந்தனர். அவர்கள் நடத்திய வாணவேடிக்கையில் தென்னாப்பிரிக்க வீரர்கள் விழிபிதுங்கி நின்றனர். மேயர்ஸ் 27 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 51 ரன்களில் வெளியேற, சார்லஸ் 46 பந்துகளில் 10 பவுண்டரி, 11 சிக்ஸருடன் 118 ரன்கள் குவித்து வெளியேறினார்.
இதன்மூலம் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 20வது இடத்தைப் பிடித்தார். ஆப்கானிஸ்தான் வீரர் முகம்மது சாஸத் (118 ரன், 67 பந்து) மற்றும் இந்திய வீரர் ரோகித் சர்மாவுடன் (118 ரன், 43 பந்து) அந்தப் பட்டியலில் இணைந்தார். அவர்களுடன் பின்னர் வந்த வீரர்களும் அதிரடியில் இறங்கியதால்தான் அந்த அணி 250க்கு மேல் ரன்னை குவிக்க முடிந்தது. இறுதியில் பவல் 19 பந்துகளில் 28 ரன்களும், ஷெப்பர்டு 18 பந்துகளில் 41 ரன்களும் ( 1 பவுண்டரி, 4 சிக்ஸர்) எடுத்திருந்தனர். தென்னாப்பிரிக்க தரப்பில் மார்கோ ஜான்சன் 3 விக்கெட்களையும் பர்னல் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதுவரை யாரும் 250 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ததில்லை!
பின்னர் மிகமிகக் கடுமையான இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. காரணம், டி20 போட்டிகளில் 250 ரன்களுக்கு மேற்பட்ட ரன்களை 2வது இன்னிங்ஸில் எடுப்பது என்பது இயலாத காரியம். ஆனால், அந்த ரன்களையும் எங்களால் எடுக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி.