
இரு பீல்டர்கள் பிடித்த இந்த கேட்ச் மேஜிக் செய்வது போல் இருந்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயினில் ஐரோப்பிய கிரிக்கெட் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இன்று CIYMS கிரிக்கெட் கிளப் மற்றும் ட்ரூக்ஸ் ஆகிய அணிகள் மோதின. ட்ரூக்ஸ் அணி அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்தப் போட்டியில், 9 பந்துகளில் 28 ரன்களுடன் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார் ட்ரூக்ஸ் அணியின் பேட்ஸ்மேன் அஹ்மத் நபி. புல் டாஸாக வந்த நான்காவது ஓவரின் 4வது பந்தை அவர் எல்லைக்கோட்டை நோக்கி தூக்கி அடித்தார். நிச்சயம் அந்த பந்து சிக்ஸர் சென்றிருக்கும் என்றே எல்லோரும் நினைத்தார்கள்.
ஆனால், எல்லைக் கோட்டை தாண்டிச் சென்ற அந்த பந்தை CIYMS கிரிக்கெட் கிளப்பின் பீல்டர் வான் டெர் மெர்வே பிடித்து விட்டார். எல்லைக் கோட்டை நெருங்கிவிட்டதால் பந்தினை லாவகமாக மைதானத்திற்குள் வீசிவிட்டு பவுண்டரி லைனில் வீழ்ந்துவிட்டார். அங்குதான் நடந்தது ட்விஸ்ட். மெர்வே பின்னாலேயே ஓடிவந்த மற்றொரு பீல்டரான முல்டர் உடனடியாக அந்த பந்தை பிடித்தார். ஆனால் அத்துடன் ட்விஸ்ட் முடியவில்லை. அவருக்கும் ஓடி வந்த வேகத்தில் எல்லைக் கோட்டை தாண்டும் நிலை இருக்கும். அந்த கன நேரத்திலும் பந்தை எல்லைக் கோட்டிற்கு உள்ளே கடத்தி, தன்னுடைய ஒரு காலை மட்டும் கோட்டிற்கு வெளியே வைத்து உடனடியாக உள்ளே இழுத்துக் கொண்டு கேட்ச் பிடித்து விக்கெட்டை உறுதி செய்துவிடுவார். இவையெல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிடும். மைதானத்தில் இருந்த அனைவரும் ஆரவாரமாக கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பார்ப்பவர்கள் அனைவரையும் இந்த அசத்தலான பீல்டிங் நிச்சயம் வாவ் சொல்ல வைக்கும்.
வான் டெர் மெர்வே மற்றும் முல்டர் ஆகிய இருவரும் எல்லைக் கோட்டில் அசத்தலாக கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பவுண்டரி லைனில் இரு பீல்டர்கள் பிடித்த அந்த கேட்ச், கிரிக்கெட் உலகில் அசத்தலான கேட்சுகளில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. இருவரும் பிடித்த இந்த கேட்ச் மேஜிக் செய்வது போல் இருந்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.