பத்து தல To லியோ.. 2023ல் திரையரங்குகளை அதிரவைக்க காத்திருக்கும் நட்சத்திரங்களின் படங்கள்!

ஆண்டுதோறும் உலக அளவில் ஆயிரக்கணக்கான படங்கள் வெளியாகின்றன. அதிலும் தமிழ் சினிமாவில் மட்டும் 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. அதில், குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் ரிலீஸாக முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் சில படங்கள் குறித்த பட்டியலைப் பார்ப்போம்.
பத்து தல To லியோ.. 2023ல் திரையரங்குகளை அதிரவைக்க காத்திருக்கும் நட்சத்திரங்களின் படங்கள்!

ஆண்டுதோறும் உலக அளவில் ஆயிரக்கணக்கான படங்கள் வெளியாகின்றன. அதிலும் தமிழ் சினிமாவில் மட்டும் 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. அதில், குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் ரிலீஸாக முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் சில படங்கள் குறித்த பட்டியலைப் பார்ப்போம். இந்த மாதம் முடிய இன்னும் ஒருசில நாட்களே உள்ளன. அந்த நாட்களிலும் சில படங்கள் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழரசன் - மார்ச் 30

பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன், சோனு சூட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்தாண்டே ரிலீசுக்கு தயாரான இப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இப்படம் மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாகத் தெரிகிறது.

பத்து தல - மார்ச் 30

இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'பத்து தல'. பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், மலையாள நடிகை அனு சித்தாரா ஆகியோர் நடித்துள்ள படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விடுதலை 1 - மார்ச் 31

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம் ‘விடுதலை பாகம் 1’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

கேப்டன் மில்லர் 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், ’கேப்டன் மில்லர்’. தனுஷ் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

மாவீரன்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், ‘மாவீரன்’. அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். பரத் சங்கர் இசையமைப்பில் அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படமும் இந்த ஆண்டே வெளியாக இருக்கிறது.

தங்கலான்

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள படம், 'தங்கலான்’. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ’கே.ஜி.எஃப்’ பட பாணியில் தங்கம் எடுக்கும் தொழிலாளர்களை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படமும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்தியன் 2

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம், ‘இந்தியன் 2’. இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். கடந்த 1996ல் வெளிவந்த ’இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படமும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது.

ஜெயிலர்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் படம், 'ஜெயிலர்'. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளி வெளியீடாக இருக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே இப்படத்தை ரிலீஸ் செய்யும் நோக்கில் படக்குழு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பொன்னியின் செல்வன் 2

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து, இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் மணிரத்னமே இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம், வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம், ‘லியோ’. இதில் த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தை, செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படமும் இந்த ஆண்டே வெளியாக இருக்கிறது.

42

’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படம் ’42’. சூர்யாவின் 42வது படமாக அமையும், இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். இந்தப் படத்தின் ‘பெயர்’ மற்றும் டீசர் வரும் மே மாதம் வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ரிலீஸ், வரும் டிசம்பர் மாதத்திலோ அல்லது அடுத்த ஜனவரி மாதத்திலோ ரிலீஸாகலாம் எனச் சொல்லப்படுகிறது.

ஏ.கே. 62

நடிகர் அஜித்குமார் நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'ஏகே 62' படம் உருவாவதாகவும், இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் எனவும் அறிவிப்பு வெளியானது. ஆனால், அடுத்த அப்டேட்டில், இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகி இருப்பதாகவும், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் எனவும் தகவல் வெளியானது. என்றாலும், இந்தப் படத்தின் அடுத்த அப்டேட்கள் இன்னும் வரவில்லை. விரைவில் இதற்கான அப்டேட்கள் வெளியானால் இந்தப் படமும் இந்த ஆண்டே வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com