Published : 18,Mar 2023 05:54 PM
நடு ரோட்டில் மதுபோதையில் ரகளை - 3 பெண்கள்மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை

திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் குடிபோதையில் ரகளை ஈடுபட்ட 3 பெண்கள் மீது 2 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நேற்று இரவு 11 மணி அளவில் 3 பெண்கள் மது அருந்திவிட்டு அங்கு சாலையில் செல்பவர்களிடம் ரகளையில் ஈடுபடுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட மூன்று பெண்களையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.
ஆனால் போதை தலைக்கேறிய நிலையில் 3 பெண்களும் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனையடுத்து பெண் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அந்த மூன்று பெண்களையும் பிடித்து மது போதைக்கான சோதனையை மேற்கொண்டு பின்பு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த மூன்று பெண்களும் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் என்றும் மேலும் அவர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் உணவு பரிமாறுவதற்காக வேலைக்கு வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து மூன்று பெண்களையும் கண்ணகி நகரில் உள்ள அவர்களது பெற்றோர்களிடம் பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் ஒப்படைத்தனர். இந்த நிலையில் சாலையில் மது அருந்தி ரகளையில் ஈடுபட்ட மூன்று பெண்கள் மீதும் திருவல்லிக்கேணி காவல் மாவட்ட போலீசார் இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.