Published : 18,Mar 2023 04:35 PM
சென்னை: பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ.50 லட்சம் கொள்ளை- 3 பேரிடம் விசாரணை

சென்னையில் பெப்பர் ஸ்பிரே அடித்து 50லட்சத்தை பறித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாகீர் உசேன்(55). இவர் மண்ணடி மற்றும் எழும்பூரில் இயங்கி வரக்கூடிய மணி எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை ஜாகீர் உசேன் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள அசைன் முகமது என்பவரிடம் 50 லட்ச ரூபாய் பணத்தை பெற்று கொண்டு மற்றொரு ஊழியர் காஜாமொய்தீனுடன் இருசக்கர வாகனத்தில் மண்ணடியில் உள்ள அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அப்போது யானைகவுனி பெருமாள் கோவில் அருகே வரும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஜாகீர் உசேன் வாகனத்தின் மீது மோதி கீழே தள்ளிவிட்டுள்ளனர். பின்னர் அவர்கள் பெப்பர் ஸ்பிரேவை கண்ணில் அடித்துவிட்டு ஜாகீர் உசேன் கையில் வைத்திருந்த பணப் பையை பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக ஜாகீர் உசேன் சம்பவம் நடந்து 4 மணி நேரம் கழித்து யானைகவுனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திலிருந்த மற்றொரு ஊழியர் காஜா மொய்தீன் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் தனது நண்பர்களுடன் இணைந்து திட்டம் போட்டு ரூ. 50 லட்சம் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.
அவர் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளையில் ஈடுப்பட்ட மேலும் இருவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்திற்குண்டான தகுந்த ஆவணங்கள் இதுவரை போலீசாரிடம் ஜாகீர் உசேன் கொடுக்காததால் ஹவாலா பணமா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.