Published : 18,Mar 2023 08:03 AM

தேனி முதல் திருவள்ளூர் வரை கொட்டிய கோடை மழை.. சென்னையில் மழையால் முடங்கியது போக்குவரத்து!

Summer-rains-poured-from-Theni-to-Tiruvallur-The-rain-paralyzed-the-traffic-in-Chennai-

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் திடீரென பெய்த கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை:

சென்னையில் கிண்டி, நங்கநல்லூர், பாலவாக்கம், ஓஎம்ஆர், ஈசிஆர் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் மழை பெய்தது. நேற்று காலையில் இருந்தே வடபழனி, பூந்தமல்லி, சைதாப்பேட்டை, கிண்டி, நந்தம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. வேளச்சேரி உள்ளிட்ட சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது.

image

பலத்த மழையால் பல்வேறு சாலைகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. வேளச்சேரியில், முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியதால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே பிரதான சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். இதன் காரணமாக, சென்னை பூந்தமல்லி மவுண்ட் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

image

தேனி:

பெரியகுளம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் ஒருமணி நேரத்திற்கு மேலாக கனமழை செய்தது. அதனைத் தொடர்ந்து, பெரியகுளம் அதனை சுற்றியுள்ள தேவதானப்பட்டி, எ.புதுப்பட்டி, தாமரைக்குளம், வடுகபட்டி, கைலாசபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக இரவு 9 மணி முதல் பரவலாக மிதமான மழை பெய்தது.இரவு 10 மணி வரை தொடர்ந்து ஒருமணி நேரமாக மழை பெய்த நிலையில், இரவில் சாரல் மழையும் பெய்தது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம், தாளவாடி, ஓசூர், தொட்டகாஐனூர் , திகனாரை சிக்கள்ளி, இக்கலூர், கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஆகிய பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அ;ப்போது வீசிய சூறைக்காற்றை தாக்குப் பிடிக்க முடியாமல் தபால்நிலைய வளாகத்தில் இருந்த பழமையான மரம் முறிந்து விழுந்தது. அதேபோல தாளவாடி காவல் நிலைய வளாகத்தில் இருந்த பழமையான 3 மரங்களும் வேருடன் சாய்ந்து விழுந்தது. இதில், காவல் நிலைய வளாகத்தில் இருந்த சுற்றுச்சுவர் இடிந்து சேதமானது. அதேபோல தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் அண்ணாநகர் அருகே சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

image

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளான செ.நாச்சப்பட்டு, மண்மலை, செங்கம், தோக்கவாடி உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் இரவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் குளுமையான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலை நேரத்தில் தென்காசி ,இலஞசி, குற்றாலம் , செங்கோட்டை, கொட்டாகுளம், வல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சுமார் ஒருமணி நேரமாக விட்டு விட்டு இடி மின்னலுடன் மழை பெய்ததால் செங்கோட்டை நகரத்தில் இரு தென்னை மரஙகள் இடி தாக்கி தீப்பிடித்து எரிந்தன. உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீ அணைத்தனர். மழை அதிகரித்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.

image

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக கனமழை நீடித்தது. திடீர் கனமழை காரணமாக தற்போது வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, கே.ஜி.கண்டிகை, திருவலாங்காடு, கனகம்மாசத்திரம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

image

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென மழை கொட்டியது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கோடை காலம் துவங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் 93 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. அவ்வபோது லேசான வெயில் அடித்தது. இதனிடையே திடீரென வேலூர் அடுத்த கந்தனேரி மற்றும் பள்ளி கொண்டா, வெட்டுவானம் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. வெயிலுக்கு இடையே பெய்த திடீர் மழையால் சற்றே வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்