Published : 17,Mar 2023 01:26 PM

“இது பொன்விழா அல்ல, பெண் விழா!” - பெண் காவலர்களுக்கு ‘9’ அறிவிப்புகள் வெளியிட்ட முதல்வர்!

CM-Stalin-salute-to-Women-police-and-inauguration-of-AVAL-Scheme

எந்தவொரு முன்னேற்ற சமுதாயத்துக்கும், காவல்துறையினரின் பங்கென்பது அளப்பரியது. ஏனெனில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருந்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். அங்கு தொழில் தொடங்க தொழில் முனைவோர்களும் முன்வருவார்கள். மக்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினையின்போது, புகார் செய்ய நாடிச்செல்லும் இடமும் காவல் நிலையங்கள்தான்.

அப்படிப்பட்ட ஒரு பொதுத்துறையில், பெண் பணியாளர்களே நியமிக்கப்படாத அல்லது மிக மிக குறைவாக நியமிக்கப்பட்டு வந்த நாட்கள் தமிழ்நாட்டிலும் இருந்துள்ளன. அந்த நேரத்தில், ‘எல்லா துறைகளிலும் பெண்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர். அப்படியிருக்கையில், காவல் துறையிலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்தது. இது நீண்ட நெடுங்காலமாகவே தமிழ்நாட்டிலும் இருந்தது. 

image

1973-ம் ஆண்டு தான் தமிழக காலல்துறையில் பெண் காவலர்கள் என தனிப்பட்டு நியமிக்கப்பட்டனர். அந்தவகையில் அவர்களுக்கு, இது பொன்விழா ஆண்டாகும். பெண் காவலர்கள் வந்த பிறகு, காவலருக்கு என்று பேருந்துகள் வாங்கப்பட்டன. அதேபோல பெண் காவலர்கள் வந்த பிறகு தான் ஆண் காவலர் உடை மாறியது. பெண் காவலர்கள் வந்த பிறகு தான் காவலர்கள் தங்குவதற்கும் இருப்பிடம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அன்றுதொடங்கி இன்றுவரை ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் நிறம்புவதில்லையாம்’ என்ற மகாகவி பாரதியார் கனவுகண்ட புதுமை பெண்களாக, தமிழக பெண் போலீசார் முத்திரை பதித்துவருகிறார்கள்.

பெண் காவலர்களை கௌரவிப்பதற்கென, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று ‘பெண் காவலர்கள் பொன் விழா ஆண்டு’ நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10 மணிக்கு நடைபெற்ற அந்நிகழ்வில் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் பங்கேற்றனர்.

image

அதில் நிகழ்வில் பெண் காவலர்களுக்கு நவரத்தன அறிவிப்புகள் என்ற பெயரில், 9 அறிவுப்புகளை வெளியிட்டது தமிழக அரசு. அதன் விவரம் பின்வருமாறு:

* ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம்

* பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி தொடங்கப்படும்

image

* காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை

* காவல் குழந்தைகள் காப்பாங்கள்

* கலைஞர் காவல் கோப்பை விருது

* குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல்கள்

image

* பெண்களுக்கு தனி துப்பாக்கிச்சுடும் போட்டிகள்

* ஆண்டுதோறும் பெண் காவலர்களுக்கு தேசிய மாநாடு 

* பணி ஆலோசனை குழு அமைப்பு

“அவள்” (AVAL - Avoid Violence through Awareness and Learning) என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

நிகழ்வில் பேசிய அவர், “பெண்களின் கைகளில் இருக்கும் கரண்டியை பிடுங்கி புத்தகங்களை கொடுக்க வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார். இது பொன்விழா மட்டுமல்ல, பெண் விழாவும்கூட! காவல் பணியுடன் குடும்பப் பணியையும் சேர்த்து செய்வதற்கான நெருக்கடி பெண் காவலர்களுக்கு இருக்கிறது. ஆண் காவலர்களுக்கு ஒரு சல்யூட் என்றால் பெண் காவலர்களுக்கு ரெண்டு சல்யூட்” என்று உரையாற்றியுள்ளார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்