Published : 17,Mar 2023 12:30 PM
”இந்த சாம்பியன் மீண்டும் எழுச்சி பெறுவார்” - ரிஷப் பண்டை சந்தித்த பிறகு யுவராஜ் நம்பிக்கை!

சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை சந்தித்து முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நலம் விசாரித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி தனது தாயாருக்கு சர்ப்ரைஸ் தருவதற்காக டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை சென்றுக்கொண்டிருந்தபோது, ரிஷப் பண்ட் ஓட்டிச் சென்ற கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவரது கார் தீப்பற்றிய நிலையில், காருக்குள் படுகாயங்களுடன் கிடந்த ரிஷப் பண்ட்டை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பிறகு அறுவை சிகிச்சை முடிந்து, தற்போது ஓய்வில் இருந்து வரும் ரிஷப் பண்ட், மீண்டும் கிரிக்கெட் விளையாட முழு உடற் தகுதிப்பெற முயன்று வருகிறார்.
ரிஷப் பண்ட் பகிர்ந்த முதல் வீடியோ!
உடல்நலம் தேறி வீட்டிற்கு வந்த ரிஷப் பண்ட், வீண்டில் ஓய்வில் இருந்துவருகிறார். தான் மீண்டுவருவதை விரைவாக சாத்தியப்படுத்த வேண்டும் என்ற துடிப்போடு இருக்கும் பண்ட், தொடர்ந்து நேர்மறையான விசயங்களில் நேரம் செலவிட்டு வருகிறார். நீச்சல் குளத்தில் ரிஷப் பண்ட் நடைபயிற்சி மேற்கொண்ட வீடியோவை அவரே பகிர்ந்து இருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்நிலையில், தற்போது உடல்நலம் தேறி வரும் ரிஷப் பண்டை, இந்தியாவின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் சந்தித்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
பண்ட் தற்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் யுவராஜ் சிங், “ குழந்தையை போன்ற அடுத்தடுத்த அடிகளில் இருக்கிறார். இந்த சாம்பியன் விரைவில் எழுச்சி பெறுவார். என்ன பையன் இவன் எப்போதும் சிரிப்போடு பாசிட்டிவாக இருக்கிறார். உனக்கு நிறைய சக்திகள் கிடைக்கட்டும்” என்று கூறியுள்ளார்.
On to baby steps !!! This champion is going to rise again .was good catching up and having a laugh what a guy positive and funny always !! More power to you @RishabhPant17pic.twitter.com/OKv487GrRC
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 16, 2023