வேலூர்: கருவேப்பிலை கட்டுக்குள் கடத்தப்பட்ட ஐம்பொன் சிலை! மடக்கிப்பிடித்த காவல்துறை

வேலூர்: கருவேப்பிலை கட்டுக்குள் கடத்தப்பட்ட ஐம்பொன் சிலை! மடக்கிப்பிடித்த காவல்துறை
வேலூர்: கருவேப்பிலை கட்டுக்குள் கடத்தப்பட்ட ஐம்பொன் சிலை! மடக்கிப்பிடித்த காவல்துறை

இருசக்கர வாகனத்தில், கட்டை பையில் கருவேப்பிலைகளுக்கு இடையே மறைத்து கடத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ளான ஐம்பொன் சிலையை விரட்டிப்பிடித்த காவல்துறையினர் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் அரியூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரேகா தலைமையிலான போலீசார், நேற்றிரவு (15.03.2023) மலைக்கோடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சிலர் சிலை கடத்தி விற்க முயல்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், பள்ளிகொண்டா செல்லும் சாலையில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததோடு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதனை அடுத்து அவர்களை விரட்டிச் சென்ற காவல்துறையினர் சாத்துமதுரை அருகே மடக்கிப் பிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் காய்கறி எடுத்துச் செல்வது போல கருவேப்பிலைகளுக்கு இடையே சிலை ஒன்றை அவர்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிலையை பறிமுதல் செய்த காவல் துறையினர் அதை ஆய்வு செய்தனர். ஆய்வில் அது ஐம்பொன்னால் ஆன சிவகாமி அம்மையார் சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து சிலையை கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வின்சென்ட் ராஜ் 43), கண்ணன் (42) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனம் மற்றும் மூன்று செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சிலையை கடத்தி வந்ததும் அதை மலைக்கோடி பகுதியில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்க பேரம் பேசி வந்ததும் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையின் மதிப்பு பல கோடி இருக்கும் என காவல் துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த அரியூர் காவல் துறையினர். பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையை வேலூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்து, கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com