Published : 15,Mar 2023 06:48 PM

ஈரான் பாரம்பரிய தீ திருவிழா: முதல் நாளே அசம்பாவிதம்... 11 பேர் மரணம்; 3,500 பேர் காயம்

11-Killed--Thousands-Injured-During-Iran-s-Fire-Festival

ஈரானில் நடைபெற்ற பாரம்பரிய தீ திருவிழாவில், 11 பேர் இறந்ததுடன், 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஈரானில் ஆண்டுதோறும் பாரசீக புத்தாண்டை முன்னிட்டு, ஃபார்சியில் சாஹர்ஷன்பே சூரி என்று அழைக்கப்படும் தீ திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா, ஒவ்வோர் ஆண்டும் ஈரானிய நாட்காட்டி ஆண்டின் கடைசி செவ்வாய்க்கிழமை (மார்ச் 14) இரவு தொடங்கி, மார்ச் 20ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

image

இவ்விழாவின்போது அதில் பங்கேற்கும் நபர்கள், தங்கள் உடலில் இருக்கும் தீய சக்திகளை விரட்டி வலிமையான உடலைத் தரும்படி வேண்டிக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக இவ்விழாவில் அவர்கள் தீயை தாண்டி குதிக்கின்றனர். மேலும் அந்த தீயில் தாண்டுவதற்கு முன்பு, “நான் உனக்கு என் நோய் அறிகுறி உள்ள மஞ்சள் நிற உடலைத் தருகிறேன். அதற்குப் பிறகு வாழ்க்கையின் சின்னமான சிவப்பு நிறத்தை எடுத்துக்கொள்கிறேன்” எனச் சொல்லி தீ மீது தாண்டுகின்றனர். இப்படி ஒருவாரம் நடைபெறும் இந்த தீ திருவிழாவில் நேற்றைய தொடக்க நாளின்போதே 11 பேர் இறந்ததாகவும், 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

image

இந்த திருவிழா, ஈரான் நாட்டின் இஸ்லாமிய மதத்தின் முந்தைய பாரம்பரியங்களில் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது எனவும், அதேநேரத்தில் இவ்விழா ஷியைட் மதகுரு ஸ்தாபனத்தால் வெறுக்கப்படுகிறது எனவும் சொல்லப்படுகிறது. என்றாலும் அந்நாட்டு இளைஞர்களிடையே இவ்விழா மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த விழாவின்போது இளைஞர்கள் பலர் பட்டாசுகளைக் கொளுத்திப் போடுவதால்தான் மரணம் அல்லது தீக்காயம் சம்பவங்கள் ஏற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- ஜெ.பிரகாஷ்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்