Published : 14,Mar 2023 12:44 PM

”அப்படி நடந்ததே தெரியாது” - ஷமியை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டதற்கு ரோஹித் பதில்!

rohit-sharma-reacts-about-crowd-chanting-towards-shami-at-gujarat-stadium

இந்தியாவின் வடமாநிலங்களில் அண்மை காலமாக பொதுவெளியில் இஸ்லாமியர்கள் செல்லும் போது அவர்களை மறித்து நின்று, ஜெய் ஸ்ரீராம் என கூச்சலிடும்படி இந்துத்தவத்தை பின்பற்றும் சில கும்பலைச் சேர்ந்தவர்கள் வற்புறுத்துவதும், தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த மாதிரியான தாக்குதல்கள் சாமானிய மக்களுக்கு மட்டும்தான் நடக்கிறதா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமியை நோக்கியும் ஜெய் ஸ்ரீராம் என்ற கூச்சல் எழுப்பப்பட்டிருக்கிறது.

அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான கடைசி டெஸ்ட் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸும் கலந்துகொண்டு போட்டியை கண்டு ரசித்தனர்.

PM Modi, Australian PM's Lap Around Stadium Ahead Of 4th Test, Huge Cheer

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்திருந்தாலும், இந்திய அணி உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக முதல் அணியாக தகுதி பெற்றிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. இருப்பினும் போட்டி முடிந்த அன்று மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பலரும் இந்திய வீரர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.

அந்த சமயத்தில் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி வந்த போது. ஒரு சிலர் அவரை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என முழங்கியிருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோக்களும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

ஏனெனில் இஸ்லாமியர்களை வெறுக்கும் வகையில் மதவெறியர்கள் சிலரின் செயலுக்கு இணையவாசிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவிடம், ஷமியை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்ட சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டிருக்கிறது.

இதற்கு, “ஷமியை பார்த்து ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அங்கு என்ன நடந்தது என்றே எனக்கு தெரியாது” என ரோஹித் ஷர்மா கூறியிருக்கிறார். ஆனால் இதுபற்றி தெரிந்திருக்காவிட்டாலும் கேள்வியாக எழுப்பப்படும்போது முகமது ஷமிக்கு நடந்தது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல என்று ரோஹித் கூறியிருக்க வேண்டும் எனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக, துபாயில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மோசமான ஆட்டமே காரணம் என பல ரசிகர்களும் விமர்சனங்களை அள்ளி வீசினர்.

இதுபோக முகமது ஷமியின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பத்தினர் பற்றியும் அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ஏனெனில் இஸ்லாமியர் என்பதற்காக பாகிஸ்தான் மீதான பற்றால் வேண்டுமென்றே மோசமான ஆட்டத்தை ஷமி வெளிப்படுத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்கள்.

அப்போதைய இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி, ஷமிக்கு எதிரான இந்த அவதூறு பேச்சுகளுக்கெல்லாம் கண்டனம் தெரிவிக்கும் வகையில், “மதத்தை வைத்து ஒருவரை தாக்குவது என்பது என்ன பொறுத்தவரை மனிதர்களின் பரிதாபத்திற்குரிய செயல். முதுகெலும்பில்லாத சிலர், தனிப்பட்ட நபரை பற்றி தரம் தாழ்ந்து பேசுவதற்கு எந்த தகுதியில் இல்லை. மதம் என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரீதியான நம்பிக்கை.” என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்