திவாலான Silicon Valley வங்கி... வெறும் 99 ரூபாய்க்கு வாங்கும் ஹெச்.எஸ்.பி.சி! முழு பின்னணி

திவாலான Silicon Valley வங்கி... வெறும் 99 ரூபாய்க்கு வாங்கும் ஹெச்.எஸ்.பி.சி! முழு பின்னணி
திவாலான Silicon Valley வங்கி... வெறும் 99 ரூபாய்க்கு வாங்கும் ஹெச்.எஸ்.பி.சி! முழு பின்னணி

சிலிக்கான் வேலி வங்கியின் பிரிட்டன் துணை நிறுவனத்தை வெறும் 1 பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் ரூ. 99 மட்டுமே) வாங்குவதாக ஹெச்.எஸ்.பி.சி வங்கி தெரிவித்துள்ளது.

சுருக்கமாக எஸ்.வி.பி. என அழைக்கப்படும் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் 16வது மிகப்பெரிய வங்கியான, சிலிக்கான் வேலி வங்கி திவால் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியில், 2022 டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி மொத்த சொத்து மதிப்பு 209 மில்லியன் டாலராகவும், 174 மில்லியன் பில்லியன் டாலர்கள் டெபாசிட்டாகவும் இருந்தது. இந்த நிலையில், வெறும் 48 மணி நேரத்தில் சிலிக்கான் வங்கி பங்குகளின் மதிப்பு 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்து, திவாலடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

2008ஆம் ஆண்டுக்கு பின் அமெரிக்காவில் மிகப்பெரிய வங்கி திவாலானது இதுவே முதல்முறையாகும். சிலிகான் வேலி வங்கியின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்ததால் பங்குச்சந்தையில் அந்த வங்கி பங்குகளின் விற்பனை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து சிலிகான் வேலி வங்கியின் பங்குகளை அமெரிக்க மத்திய டெபாசிட் காப்பீடு நிறுவனம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. மேலும் இந்த வங்கியின் வீழ்ச்சி ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தகவல்கள் வெளியாகின. இந்த வங்கி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிக கடன் கொடுத்ததே திவாலுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் சுமார் 10,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சிலிக்கான் வேலி வங்கியில் பணத்தை டெபாசிட் செய்திருப்பதாகவும், வங்கி திவாலானதைத் தொடர்ந்து அச்சிறு வணிக நிறுவனங்கள், அதன் ஊழியர்களுக்கு அடுத்த ஒரு மாத சம்பளத்தை கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அதன்மூலம் சுமார் 1 லட்சம் வேலையாட்கள் தங்கள் பணியை இழக்க நேரிடும் சூழல் உருவாகி இருப்பதாகவும், ஆகவே அரசு விரைந்து மாற்று முடிவு எடுக்க வேண்டும் என அமெரிக்க அரசுக்கு Y Combinator அறிக்கை விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து, சிலிக்கான் வேலி வங்கி வாடிக்கையாளர்களின் டெபாசிட்களை முழுமையாக அளிக்க போதுமான நிதி ஆதாரத்தை அளிப்பதாக அமெரிக்க அரசு உறுதியளித்தது.

இந்த உறுதியான அறிவிப்பு வெளியான பிறகு, பிரிட்டனின் வங்கி கட்டமைப்புக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் நன்றாக இருப்பதாக அந்நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் இங்கிலாந்து கூறியுள்ளது. மேலும், சிலிக்கான் வேலி வங்கியில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிக்கு அமெரிக்க அரசு உத்தரவாதம் அளித்திருப்பதன் மூலம் பிரிட்டன் நாட்டின் வங்கிகள் நேரடியாக பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரிட்டன் வங்கி அமைப்பு பாதுகாப்பாகவும், உறுதியாகவும், போதுமான மூலதனம் கொண்ட சந்தையாக விளங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் சிலிக்கான் வேலி வங்கியின் பிரிட்டன் கிளை, அமெரிக்க வங்கியில் இருந்து தனியாக பிரிக்கப்பட இருக்கிறது. தவிர, பிரிட்டன் கிளை மற்றும் அமெரிக்க நிறுவன தொடர்புடைய சொத்துக்கள், கடன் நிலுவைகள் இந்த ஒப்பந்தத்தில் சேராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிலிக்கான் வேலி வங்கி பிரிட்டன் கிளை வர்த்தகத்தை மட்டும் தனியாகப் பிரித்து 1 பவுண்ட் தொகைக்கு வாங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம் அமெரிக்கா - பிரிட்டன் அரசுகள் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. சிலிக்கான் வேலி வங்கியின் பிரிட்டன் துணை நிறுவனத்தை வெறும் 1 பவுண்டுக்கு (ரூ. 99-க்கு) வாங்குவதாகத் தெரிவித்திருக்கும் ஹெச்.எஸ்.பி.சியின் (HSBC) சிஇஓ நோயல் க்வின், “சிலிக்கான் வேலி வங்கியின் பிரிட்டன் துணை நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலம் இங்கிலாந்தில் எங்கள் வணிகத்திற்கு சிறந்த நிறுவன கட்டமைப்பை அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 10 ஆம் தேதி நிலவரப்படி சிலிக்கான் வேலி வங்கியின் பிரிட்டன் நிறுவனம் சுமார் 5.5 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான கடன்களையும், 6.7 பில்லியன் பவுண்ட் மதிப்பிலான டெபாசிட்களையும் கொண்டு இருந்தது என HSBC தெரிவித்துள்ளது. மொத்த வர்த்தக புத்தகத்தின் மதிப்பு 8.8 பில்லியன் பவுண்ட் என மதிப்பிடப்படுகிறது. ஹெச்.எஸ்.பி.சி வங்கி, ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com