Published : 13,Mar 2023 02:39 PM

புதுச்சேரியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி.. சிறப்பம்சங்கள் என்ன?

puducherry-budget-Announcement-today

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.300 சமையல் எரிவாயு மானியம் வழங்கப்படும் எனவும், பெண்குழந்தைகள் பிறந்தவுடன் ரூ.50 ஆயிரம் 18 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தப்படும் எனவும், 6 ஆம் வகுப்பு முதல் அரசுப்பள்ளியில் சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என பேரவையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9-ந் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து 10-ந் தேதி துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். இதைத்தொடர்ந்து இன்று காலை மீண்டும் சட்டசபை கூடியதும், நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சரியாக 10.15 மணிக்கு 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கு ரூ.11,600 கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கான வரி இல்லாத முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி. இதில் புதுச்சேரி மாநில பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைக்கப்பட்டதால் வருவாய் இழப்பை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு கூடுதலாக ரூ.1,250 கோடியை வழங்கியுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இந்த பட்ஜெட்டில் முக்கிய அம்சங்களாக, 

அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.300 வீதம் வருடத்திற்கு மொத்தம் 12 சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும் என்றும்,

பெண்குழந்தைகளின் எதிர்கால நலனைக்கருத்தில் கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குழந்தை பிறந்தவுடன் ரூ.50 ஆயிரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 18 வருட காலத்திற்கு நிரந்தர வைப்புத் நிதியாக செலுத்தப்படும் எனவும்,

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் உள்ளூர் பேருந்துகளில் அட்டவணையின பெண்கள் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்படும்  என்ற அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ரங்கசாமி.

புதுச்சேரி மாநிலத்தில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத்திட்டம் கொண்டு வரப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டார். இதன் மூலம் 6 ஆம் வகுப்பு முதல் தமிழக அரசின் பாடத்திட்டம் கைவிடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:

• மகளிருக்கான தனி நிதியத்திற்கு ரூ.1,332 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்தியாவிலேயே முதன் முறையாக புதுச்சேரியில் ரூ.555 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பசுமை தனி நிதியம் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

• வேளான் உற்பத்தியை பெருக்குவதற்காக வேளாண் அங்கக இடுபொருட்களை பொதுப்பிரிவினருக்கு 75 சதவீத மானியத்திலும், அட்டவணையின விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

• சதுப்பு நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி, அவ்விடத்தில் இயற்கையாக வளரும் தாவர இனங்களை கொண்ட காடுகள் உருவாக்கப்படும்.

• பால் உற்பத்தியை பெருக்க நவீன பால் கறவை இயந்திரங்கள் கால்நடை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும், ஓர் உயர் ரக கலப்பின கறவைப் பசுமாடு வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்ற அறுவிப்பு பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தது.

• தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், மேம்படுத்தவும் புதுச்சேரி உலகத்தமிழ் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

• வயது மூப்பின் காரணமாக மீனவ முதியோர்களின் சமூக உரிமையை பாதுகாக்க 70 வயதிலிருந்து 79 வயது வரை உள்ள மீனவர்களுக்கு இதுவரை வழங்கி வந்த ரூ.3,000 உதவித்தொகையை ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

• பெண்களுக்கு அதிகரித்துள்ள மார்பக புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்க 30 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கட்டாய பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

• இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக புதுச்சேரி தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்றும், அனைத்து அரசு அலுவலங்களிலும் அதிவேக இணைய சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

• மேலும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தடையை செயல்படுத்த துணி பைகளை வழங்கும் இயந்திரங்களை பொது இடங்களில் வைக்கப்படும்.

• புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்திற்கு 50 புதிய மின்சார பேருந்துகள்; 50 டீசலில் இயங்கும் பேருந்துகள் இயக்கப்படும்.

• கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

• அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனம் மூலமும் தகுதி வாய்ந்த அரசு ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ரங்கசாமி.

இதனைத்தொடர்ந்து பேரவை நாளைக்கு ஒத்திவைத்து சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்க்க கூடிய எந்த திட்டமும் இல்லை என சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் மாநில திமுக அமைப்பாளருமான சிவா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், ”புதுச்சேரி பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து அரிசி வழங்குவது, மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளை திறப்பது, மின்துறை தனியார் மயத்தை நிறுத்துவது உள்ளிட்ட எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. ஏற்கனவே இருந்த ரூபாய் 334 சிலிண்டர் மானியம் குறைக்கப்பட்டு, இப்போது ரூபாய் 300 மானியம் அறிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு இல்லை. புதிய தொழில் கொள்கை குறித்த அறிவிப்பு இல்லை. கல்வி மேம்பாட்டிற்கான அறிவிப்பு இல்லை. மாநில அந்தஸ்து குறித்த அறிவிப்பு இல்லை. மாநில கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இல்லை. அரசு பேருந்துகளில் பட்டியலின பெண்களுக்கு மட்டும் இலவச பயணம் என பட்ஜெட்டில் அறிவித்திருப்பது, ஜாதிய பாகுபாட்டை ஏற்படுத்தும். ஒட்டு மொத்தத்தில் மக்கள் எதிர்பார்க்க கூடிய எந்த திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்