Published : 13,Mar 2023 12:58 PM
'ஒரு நாள் கிரிக்கெட்டை 40 ஓவர்களாக குறைக்கணும்' - ரவி சாஸ்திரியின் கருத்து சரியானது தானா?

ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க 50 ஓவர்களிலிருந்து 40 ஓவர்களாக குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி.
டி20 கிரிக்கெட் ஏற்படுத்திய தாக்கம்!
உலகெங்கிலும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் மிகவும் பிரபலமானதாக உள்ளது. டி20 போட்டிகள் அறிமுகமானதிலிருந்து கிரிக்கெட் பார்க்காதவர்கள் கூட தற்போது கிரிக்கெட் ரசிகர்களாக மாறிவிட்டனர். அதேசமயம் டி20 போட்டிகள் மீது ரசிகர்களுக்கு இருக்கும் மோகத்தால் ஒருநாள் (50 ஓவர்) போட்டிகள் சலிப்பை ஏற்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
40 ஓவராக குறைங்கப்பா - குரலெழுப்பும் ரவி சாஸ்திரி!
இந்த நிலையில் ஒரு நாள் கிரிக்கெட்டை 50 ஓவர்களில் இருந்து 40 ஓவர்களாக குறைக்க வேண்டும் என்று குரலெழுப்பியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
1983இல் உலகக் கோப்பை வென்ற போது 60 ஓவர்கள்
இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, “அந்தக்காலத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி 60 ஓவர்கள் கொண்டதாக இருந்தது. 1983ஆம் ஆண்டில் நாங்கள் உலகக் கோப்பையை வென்றபோது அது 60 ஓவர்கள் போட்டிதான். அதன்பிறகு 60 ஓவர்கள் சற்று நீளமானது என்று ரசிகர்கள் நினைத்தனர். 20 முதல் 40 வரையிலான ஓவர்கள் ஜீரணிக்க கடினமாக இருப்பதை மக்கள் கண்டறிந்தனர். அதனால் அதை 60 ஓவர்களில் இருந்து 50 ஆக குறைத்தார்கள். அந்த முடிவெடுத்து பல வருடங்கள் உருண்டோடி விட்டன, இப்போது ஏன் அவ்வாறு 50லிருந்து 40ஆக குறைக்கக்கூடாது. ஏனென்றால் நாம் காலத்திற்கேற்ப சிந்திக்க வேண்டும், 50 ஓவர்கள் என்பது மிக நீளமாக உள்ளது
டி20 கிரிக்கெட்டே போது.. இருதரப்பு போட்டிலாம் வேண்டாம்
டி20 ஃபார்மேட் தான் முக்கியமானது என்று நினைக்கிறேன். இது விளையாட்டின் வளர்ச்சிக்கு தேவையான டானிக். டி20 பணம் கொழிக்கும் விளையாட்டு. அதேசமயம் இருதரப்பு தொடர்கள் குறைக்கப்பட வேண்டும். இப்போது நிறைய நாடுகளில் உள்நாட்டு லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன. அதுவே போதுமானது என்று நினைக்கிறேன்.
ஒருநாள் போட்டி அதன் அழகை இழந்துவிட்டது
டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டாகவே இருக்கும். அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஒருநாள் போட்டி வடிவம் அதன் அழகை இழந்துவிட்டது. மக்கள் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்க்க விரும்புகிறார்கள், இதுதான் கிரிக்கெட்டின் உண்மையான வடிவம்.
டெஸ்ட் கிரிக்கெட் கலைப்படம் போன்றது!
டெஸ்ட் கிரிக்கெட் என்பது கலைத் திரைப்படம் போன்றது; டி20 என்பது வணிக சினிமா போன்றது. ஆனால் ஒருநாள் போட்டிகள் போரடிப்பதால் அதற்கான கூட்டம் இப்போது இல்லை. ஒருநாள் போட்டிகளை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டுமென்றில் 40 ஓவராக குறைப்பது இன்றியமையாதது'' என்று கூறியுள்ளார்.
ரவி சாஸ்திரியின் கருத்தை எப்படி பார்க்கலாம்?
பொதுவாகவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு தான் மிகப்பெரிய அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதுண்டு. அதேபோல், டி20 கிரிக்கெட் வடிவத்தின் அறிமுகம் தான் மற்ற இரண்டு வடிவங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற விமர்சனங்கள் அதிக அளவில் உள்ளது. பல வீரர்களும் ஐபிஎல் போன்ற லீக் ஆட்டங்களை காட்டிலும் தங்கள் நாடு விளையாடும் இந்த மூன்று வகையான ஆட்டங்களில் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர்.
சில வீரர்கள் தான் இதுபோன்ற டி20 வடிவங்களை நாடிச் செல்கின்றனர். இந்திய அணியிலும் ஐபிஎல் போன்ற லீக் ஆட்டங்களில் வீரர்களின் ஃபர்பார்மன்ஸை பொறுத்தே வீரர்களை தேர்வு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதனால், ரஞ்சி டிராபி போன்ற தொடர்களில் முக்கியத்துவம் குறைகிறது என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.