Published : 11,Mar 2023 08:33 PM

முன்பதிவு இல்லாமலே குவிந்த வடமாநிலத்தவர்! அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள்!

Trichy-to-Kanyakumari-train-stopped-as-north-Indians-occupied-reserved-coaches

கன்னியாகுமரியில் இருந்து திருச்சி வழியாக ஹவுரா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு மதியம் 01:15 மணிக்கு வந்தது. அப்போது ரயில் நிலைய நடைமேடை எண் 3ல் காத்திருந்த 500க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் முன்பதிவு பெட்டிகளில் உள்ளே சென்றனர். குறிப்பாக S1 முதல் S10 வரை உள்ள பெட்டிகளில் முன்பதிவு செய்து இருந்த பயணிகள் இருந்தனர்.

ஆனால் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற்ற வடமாநிலத்தவர்கள் முன்பதிவு பெட்டிகளில் கட்டுக்கடங்காமல் ஏறியதால் மற்ற பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாயினர். மதியம் 01:30 மணி அளவில் ரயில் புறப்பட்டபோது முன்பதிவு பெட்டியில் இருந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தினர். உடனடியாக டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே போலீசார் அபாய சங்கிலியை யார் இழுத்தது என்ற விசாரணை நடத்தினர்.

image

முன்பதிவு பெட்டியில் முன்பதிவு செய்யாத வட மாநிலத்தவர்களை இறக்கிவிடுமாறு மற்ற பயணிகள் தெரிவித்தனர். இரண்டு பெட்டிகளில் ஏறிய வட மாநிலத்தவர்களை இறக்கிவிட்ட போலீசார் ரயிலை நகர்த்த அங்கு இருந்து அறிவுறுத்தினர். பின்னர் ரயில் கிளம்பியதும் மறுபடியும் ரயில் அபாய சங்கலியை பிடித்து பயணிகள் இழுத்தனர்.

இதே போன்று நான்கு முறை அபாய சங்கிலியை இழுக்கப்பட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயண சீட்டு இல்லாமல் முன்பதிவு செய்யாமல் ஏறிய வட மாநிலத்தவர்களை கீழே இறக்கி விட்டனர். தொடர்ந்து ரயில் பெட்டியில் ஏறிய பயணிகளிடம் டிக்கெட் வைத்துள்ளார்களா என்று டிக்கெட் பரிசோதர்கள் சோதனை செய்தனர்.

image

இதில் பெரும்பாலான வடமாநில பயணிகள் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் ஏறியது தெரியவந்தது. உடனடியாக அவர்களை ரயில் நிலையத்தைவிட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து 02:35 மணியளவில் ரயில் புறப்பட்டது. அப்போது மூன்றாவது நடைமேடையில் காத்திருந்த வட மாநிலத்தவர்கள் ரயில் புறப்பட்டதும் ஓடிப்போய் ரயிலில் ஏறினார். ரயில்வே போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதர்கள் பலமுறை அறிவுறுத்தியும் அவர்களை மதிக்காமல் வடமாநில பயணிகள் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டனர்.

image

வட மாநிலத்தவர்களால் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமானது மட்டுமல்லாமல் ரயில் நிலையத்தில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்