Published : 09,Mar 2023 09:36 PM

அடேங்கப்பா..! நித்யானந்தாவின் ”கைலாசா” போல் உலகில் இத்தனை நாடுகள் இருக்கா? இதோ லிஸ்ட்!

Countries-in-the-world-like-nithyananda-kailasa-country

சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை வாங்கியிருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், அதுபோன்று சில நாடுகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

கைலாசாவை உருவாக்கிய நித்யானந்தா!

கர்நாடகா மாநிலம் பிடதி ஆசிரமத்தில் தங்கி ஆன்மிக சொற்பொழிவாற்றி வந்தவர் நித்யானந்தா. அவர்மீது கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனால், அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் கொஞ்ச காலத்துக்கு தெரியாமல் இருந்தது. இருப்பினும், அவ்வப்போது அவர் திடீர் திடீரென ஆன்மீக வீடியோக்களை மட்டும் இணையத்தில் வெளியிட்டு வந்தார். இதற்கிடையே தாம் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

image

ஐ.நா. சபையில் பங்கேற்ற கைலாசா நாட்டுப் பிரதிநிதி

தற்போது, கைலாசாவின் இ-குடியுரிமைக்கான இ-விசா விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்து, கைலாசா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் பதிவிட்டுள்ளது. மேலும், நாட்டின் கருவூலம், வர்த்தகம், இறையாண்மை, வீட்டுவசதி, மனித சேவைகள் மற்றும் பல துறைகள் உள்ளன. மேலும், கொடி, அரசியலமைப்பு, பொருளாதார அமைப்பு, பாஸ்போர்ட் மற்றும் சின்னம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. சபை மாநாட்டில் கைலாசா நாட்டு தரப்பில் விஜயபிரியா என்பவர் தலைமையில் நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் கலந்துகொண்டது கவனத்தை ஈர்த்தது.

ஐ.நாவில் கேள்வி எழுப்பிய விஜயபிரியா

இதில் பேசிய விஜயபிரியா, “கைலாசா என்பது இந்து மதத்தின் முதல் இறையாண்மை கொண்ட நாடு. இந்து மதத்தின் உயர்ந்த தலைவரான நித்தியானந்தாவால் கைலாசா உருவாக்கப்பட்டது. நித்தியானந்தா இந்து மதத்தின் மரபுகளை புதுப்பிக்கிறார். இந்து மதத்தின் பூர்விக மரபுகள் மற்றும் வாழ்க்கை முறையைப் புதுப்பித்ததற்காக எங்கள் தலைவர் நித்தியானந்த கடுமையான துன்புறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியுள்ளார். நித்தியானந்தா மற்றும் கைலாசாவில் உள்ள புலம்பெயர்ந்த 20 லட்சம் மக்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க சர்வதேச அளவில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என ஐ.நாவிடம் விஜயபிரியா கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், கைலாசா 150 நாடுகளில் தூதரகங்களைக் கொண்டுள்ளதாகவும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நிறுவியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இதனால் கைலாசா பற்றிய விவாதம் மீண்டும் ஊடகங்களில் பேசுபொருளானது.

image

ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு மறுப்பு

இதுகுறித்து கைலாசா நாட்டை, ஐ.நா. சபை அங்கீகரித்துள்ளதா என்கிற விவாதங்களும் எழுந்தன. இதற்குப் பதிலளித்த ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு செய்தித் தொடர்பாளர், ”ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்த வகையில்தான் நித்யானந்தா தரப்பினர் பங்கேற்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.

ஐ.நா. சபையில் கைலாசா பங்கேற்றது எதற்கு?

உண்மையில் நித்யானந்தாவால் கடந்த 2019ஆம் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா' (USK) நாடானாது, ஈக்வடார் அருகே உள்ள தீவு ஒன்றில் உள்ளதாகத் தகவல்கள் சொல்லப்படுகிறது. இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் திபெத்தில் உள்ள கைலாச மலையின் நினைவாக ’கைலாசா’ என்று பெயரிடப்பட்டதாக அதற்கு விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், கைலாசா நாட்டை, ஐ.நா. சபை அங்கீகரிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. ஐ.நாவால் அங்கீகரிக்கப்படும் நாடால் பல சர்வதேச மன்றங்கள், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தை அணுக முடியும். இதை எதிர்பார்த்துதான் கைலாசா நாடு ஐ.நா. சபையில் பங்கேற்றதாகச் சொல்லப்படுகிறது.

image

மைக்ரோநேஷன் என்றால் என்ன?

ஒரு பிரதேசம் நாட்டின் அந்தஸ்தைப் பெறவில்லை எனில், அது மைக்ரோநேஷன் (micronation) என அழைக்கப்படுகிறது. அதாவது, அந்த நாடு தன்னை, ‘சுதந்திர நாடு’ என்று அறிவித்துக் கொண்டாலும் மற்ற நாடுகள் அல்லது ஐநாவால் அங்கீகரிப்படாத பகுதியே மைக்ரோ நேஷன் ஆகும். இப்படி, சர்வதேச அளவில் 80 நாடுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவை லிச்சென்ஸ்டைன் அல்லது வாடிகன் சிட்டி போன்ற சிறுபகுதிகளிலிருந்து வேறுபட்டவை.

ஆன்மிகக் கோட்பாடுகள், இதர கொள்கைகளுக்காக ஒரு சிலர் இப்படி சுதந்திர நாடாக அறிவித்துக் கொள்கின்றனர். அவர்களில் சிலரிடம் பணம் அதிகமிருப்பதால், தங்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொள்கின்றனர். ஆனால், இப்படிப்பட்ட நாடுகள் ஐநாவால் அங்கீகரிக்கப்படுவதில்லை. என்றாலும் அப்படியான சில நாடுகள் பற்றி இங்கு பார்ப்போம்...

image

லிபர்லாந்து (Liberland):

இந்நாடு கடந்த 2015ஆம் ஆண்டு, செக் நாட்டு அரசியல்வாதியான விட் ஜெட்லிகாவால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. கைலாசாவைப்போலவே, இந்த நாட்டிலும் இணையதளம் உள்ளது. இந்த நாடு, குரோஷியா மற்றும் செர்பியா நாடுகளுக்கு இடையே அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், இந்நாட்டில் இரண்டு துணை ஜனாதிபதிகள் மற்றும் ஐந்து அமைச்சர்கள் இருப்பதாகவும், இந்நாட்டின் மொழி ஆங்கிலம் எனவும் லிபர்லாந்து நாட்டு இணையதளம் தெரிவித்துள்ளது.

சீலந்து (Sealand):

1967ஆம் ஆண்டு ராய் பேட்ஸ் என்பவரால் இந்த நாடு உருவாக்கப்பட்டது. இது, இங்கிலாந்து கடற்கரையிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தப் பகுதியில் இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலேயர்களால் ரஃப்ஸ் டவர் என்ற ராணுவக் கோட்டை கட்டப்பட்டது. ஆனால், போர் முடிந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு அது கைவிடப்பட்டது. இந்த நிலையில்தான் ராய் பேட்ஸ் என்பவர், அந்த கோட்டையை வானொலி நிலையம் அமைப்பதற்காக ஆக்கிரமித்தார். பின்னர், அதை சீலந்து நாடாக அறிவித்தார். இந்த நாட்டில் 70 பேர் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது.

image

பாம்பு மலை மாகாணம் (Principality of Snake Hill):

இந்த நாடு, 2003ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நாட்டின் தலைவராக ஹெலினா ஸ்னேக் ஹில் உள்ளார். இவர், தன்னுடைய கணவர் இறந்ததற்கு பிறகு இந்நாட்டின் தலைவரானார். இங்கு 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது. சில ஆஸ்திரேலிய மக்கள் வரி செலுத்த முடியாமல் இப்பகுதிக்குச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசாங்கம் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

image

எல்லோர் ராஜ்யம் (Kingdom of Elleore):

இது, டென்மார்க் தீவான ஜிலாந்தில் ரோஸ்கில்டிற்கு வடக்கே அமைந்துள்ளது. இந்நாடு எல் வடிவில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ரஜ்னீஷ்புரம் (Rajneeshpuram):

இது, வடமேற்கு அமெரிக்காவில் உள்ள ஓரிகானின் வாஸ்கோ கவுண்டியில் அமைந்துள்ளது. இந்திய ஆன்மீக குரு ரஜ்னீஷின் முயற்சியால் இந்நாடு உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ரஜ்னீஷ்புரத்திற்கு சொந்தமாக போலீஸ், தீயணைப்பு துறை மற்றும் பொது போக்குவரத்து அமைப்பு உள்ளது.

image

ஒரு நாடாக ஆவதற்கு வரையறுக்கப்பட்ட பிரதேசம், மக்கள், அரசு மற்றும் பிற நாடுகளுடன் உறவுகளை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு நாட்டின் மக்கள் என்பவர்கள் அவர்களின் தேசியத்தின் மீதான நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் கணிசமான பெரிய மக்கள்தொகை என வரையறுக்கப்படுகிறது. பெரும்பான்மை மக்கள் தாய் நாட்டிலிருந்து விருப்பத்தை தெளிவாக வெளிப்படுத்துதல், சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுதல் உள்ளிட்ட கருத்தில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்